Latest Videos

நான் அதிகமாக பேச மாட்டேன்; முக்கியமான நேரத்தில்தான் பேசுவேன் அந்த நேரம் வந்துவிட்டது: சசிகலா அதிரடி!!

By SG BalanFirst Published Jun 16, 2024, 7:51 PM IST
Highlights

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த சசிகலா நடராஜன் திடீரென ஞாயிறு மாலை தனது ஆதரவாளர்களைக் கூட்டிப் பேசினார்.

அதிமுக முடிந்துவிட்டது என நினைப்பவர்களுக்கு என்னுடைய என்டிரி ஆரம்பம் ஆகிவிட்டது என சசிகலா நடராஜன் கூறியிருக்கிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பிரயாணம் செல்லவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த சசிகலா நடராஜன் திடீரென ஞாயிறு மாலை தனது ஆதரவாளர்களைக் கூட்டிப் பேசினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:

அதிமுக கட்சி முடிந்துவிட்டதாக நினைப்பவர்களுக்கு என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது. 2026ல் தனிப் பெரும்பான்மை சக்தியுடன் அம்மாவின் ஆட்சி அமையும். நான் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று சசிகலா கூறினார். சிலரது சுயநலத்தால் தான் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இந்தியாவில் மூன்றாவது பெரிய இயக்கமாக இருந்த அதிமுக ஒருசில சுயநலவாதிகளால் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கற்றுகொண்டேன். எனக்கு இந்த ஊரு, இந்த சாதி என்பது தெரியாது. ஜெயலலிதா அவர்களும் சாதி பார்ப்பவர் இல்லை. அப்படி பார்த்திருந்தால் அவரின் உதவியாளராக நான் இருந்திருக்க முடியாது.

தற்போது அதிமுகவில் சாதி அரசியல் செல்கிறார்கள். அவர்கள் தனியாக சாதி இயக்கத்தை உருவாக்கி சென்றால் யாரும் கேட்கமாட்டார்கள். ஆனால் அதிமுகவில் இருந்து அப்படி செய்வதை ஏற்க முடியாது. நான் சாதி என நினைத்திருந்தால் அவருக்கு முதல்வர் பதவி கொடுத்திருப்பேனா? அப்படி நான் நினைக்கவில்லை.

திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது. தொண்டர்கள் உழைப்பார்கள் பதவி வாரிசுக்கு போகும். அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. தொண்டரும் தலைவர் ஆகலாம். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 3வது 4வது இடம் பெற்றிருப்பது டெபாசிட் இழந்துள்ளது. தானும் கெட்டு கட்சியையும் கெடுக்க கூடாது.

திமுகவின் பிடியில் இருந்து தமிழக மக்களை காக்க நாம் வந்தே ஆக வேண்டும். அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்து இருப்பது தவறானது. அதிமுக முடிந்துவிட்டது என நினைப்பவர்களுக்கு என்னுடைய என்டிரி ஆரம்பம் ஆகிவிட்டது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. திமுக ஆட்யில் மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. புதிய பேருந்துகள் வாங்காமல் உள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கொடாநாடு வழக்கை தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுகிறார்கள். கொடாநாடு விசாரணையை ஏன் இவ்வளவு பொறுமையாக நடத்த வேண்டும். திமுக அரசால் கொடாநாடு விசாரணைகூட வேகமாக நடத்த முடியவில்லை."

இவ்வாறு சசிகலா நடராஜன் கூறியுள்ளார்.

click me!