
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை கடுமையாக சாடினார்.
கோயம்புத்தூர், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களைத் திறந்து வைத்து ஷா பேசுகையில், "ஊழல் வழக்குகளில், திமுகவின் அனைத்து தலைவர்களும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் வேலைக்கு பணம் வாங்கிய வழக்கில் சிக்கியுள்ளார், மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார், மூன்றாவது நபர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை எதிர்கொள்கிறார்."
தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி மறுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஷா, "மு.க.ஸ்டாலின் கூற்றில் உண்மையில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கொடுத்துள்ளது." என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது : மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு!
தொடர்ந்து பேசிய அவர் “ தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அடிக்கடி கூறுகிறார். ஆனால், யுபிஏ மற்றும் என்டிஏ ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியை ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையான அநீதி யுபிஏ ஆட்சியில் தான் நடந்தது," என்று கூறினார்.
திமுகவை கிண்டல் செய்த ஷா, ஊழலில் ஈடுபட்டவர்கள் மு.க.ஸ்டாலின் கட்சியில் உறுப்பினராக இணைய வேண்டும் என்றார்.
"சில நேரங்களில் திமுகவில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளையும் உறுப்பினர் சேர்க்கை மூலம் திமுகவில் சேர்த்தது போல் உள்ளது. மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் உண்மையான கவலைகளில் இருந்து திசை திருப்ப பல பிரச்சினைகளை எழுப்புகிறார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அரசியல் டயலாக் உடன் உரையாற்றி வரும் விஜய்!
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் என்றும் ஷா மேலும் கூறினார். வாரிசு அரசியலையும், ஊழலையும் ஒழிப்பதாகவும், தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை நீக்குவதாகவும் அவர் சூளுரைத்தார்.
மேலும் "தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்க தயாராகுங்கள். 2026-ல், நாங்கள் ஒரு என்டிஏ நிர்வாகத்தை நிறுவுவோம். இந்த புதிய அரசு தமிழகத்துக்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும். மாநிலத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழகத்தில் ஊழல் ஒழிக்கப்படும். தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழகத்தில் இருந்து அகற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோயம்புத்தூர், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களைத் திறந்து வைத்தார். ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.