கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உட்பா பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலை தெற்கு அந்தமான பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ம் தேதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேங்கி உள்ள நீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப்படையின் தலா 25 வீரர்கள் அடங்கிய 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மிக நீளமான கயிறுகள், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், மருத்துவ முதலுதவி உபகரணங்கள் ஆகியவற்றுடன் இந்த குழு மழை பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
மேலும் தமிழக அரசு எந்த நேரம் அழைத்தாலும் புறப்படுவதற்காக பல குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. நிலைமையை கண்காணிக்க பேரிடர் மீட்பு படை தமிழக அரசுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளது எனவும் படைத்தளத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாகவும் தலைமை அலுவலர் கமாண்டண்ட் அகிலேஷ் குமார் தெரிவித்தார்.