வியர்வை சிந்தி வேதனையை அறுவடை செய்யும் விவசாயி...

First Published Dec 2, 2017, 4:54 PM IST
Highlights
all the bananaa tree fallen in the south tamilnadu


தென்மாவட்டத்தில் சமீபத்திய புயலில்,வியர்வை சிந்தி வேதனையை அறுவடை செய்யும் விவசாயி.
-------------------------------------------------------
வாழை மரம் பனை மரம் போன்று பன்முக பயன்பாடு உள்ளது. வாழைக் காய், வாழைப் பழம், வாழைத் தண்டு, வாழை இலை, வாழைப் பூ, வாழை மரம் முதல் வாழை பட்டைகள் மற்றும் நார் என அனைத்தும் பயன்பாட்டிற்குட்பட்டது. 

காலங்காலமாக கிராமத்தில் உள்ள  விவசாய நிலங்களில் நெல், வாழை, கரும்பு, மிளகாய், பருத்தி ஆகிய பயிர்களை குளத்து பாசனமும், கிணற்று பாசனம் உள்ள நிலங்களில் பயிர் செய்வதுண்டு. வானம் பார்த்த கரிசல் காட்டில் எள், உளுந்து, துவரை, மக்காச் சோளம் போன்ற பயிர்களும், தண்ணீர் வசதி உள்ள இடங்களில் சோளமும், கம்பும் பயிரிடுவது வாடிக்கை. 

ஆனால் மழை பெய்ந்து காற்றடித்தால் பெரிய பாதிப்பு வாழைக்குத் தான். இந்த வாழை தொடர்ந்து சந்ததிகளை உருவாக்கும் பல்லாண்டு தாவரம் ஆகும். நடவு செய்த பின்பு வருகின்ற முதல் சுற்று பயிர் முதல் பயிர் நிலை எனப்படுகிறது.  மறுதாம்பு பயிரானது அறுவடைக்கு பின்பு தோன்றும் பக்க கன்று அல்லது தொடர் கன்று ஆகும்.

இரண்டாவது  சுற்று கன்று முதல் மறுதாம்பு பயிர் என‌வும், மூன்றாவது சுற்று கன்று இண்டாவது மறதாம்பு பயிர் எனப்படுகின்றது. வாழைக்கு கருவேல மரங்களின் கம்புகளை முட்டுக்கொடுத்து வைத்தாலும் அதை மீறி புயல் காற்றும் சூறைக்காற்றும் அடித்து வாழை மரத்தை சாய்த்து விடும். 1964 தனுஷ்கோடியில் ஏற்பட்ட சீற்றத்தின் போது அதனுடைய தாக்கம் நெல்லை மாவட்டம் வரையிருந்தது. கிட்டத்தட்ட 1000 வாழைகள் தரையில் சாய்ந்து வீழ்ந்ததை இன்றைக்கும் கண்முன் இருக்கிறது. இப்படி பல சமயம் வாழை சாய்ந்துவிட்டாலே குடும்பத்தில் சோர்வு தட்டிவிடும்.  1987 வரை சூறாவளியால் பல முறை மரங்கள் சாய்ந்ததும் உண்டு. அதனால் பெரியளவில் நட்டமும் ஏற்பட்டதுண்டு. 

சரியான நேரத்தில் குலை தள்ளி, காய்த்து வாழைக்காய் முற்றிவிட்டால் நல்ல வருமானம். இராமநாதபுரம் வரை வாழையை அப்படியே வாங்கி லாரியில் ஏற்றிச் சென்றதெல்லாம் நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் வறட்சியால் எங்கள் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயமே பொய்த்துவிட்டது. கடந்த 2 நாட்களாக தென்மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் காற்று மற்றும் மழையினால் வாழை எல்லாம் சாய்ந்து கீழே தரையில் கிடப்பதை பார்த்து மனம் வேதனையடைகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு பார்த்து விவசாயி பயிர் செய்தாலும் இப்படியான கொடுமையாக காட்சிகளை தவிர்க்கமுடியவில்லை. 

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல நூறு வாழைகள் சாய்ந்து விட்டதாக செய்திகள் வருகின்றன. என்னுடைய விவசாய பணிகளை செய்துகொண்டு வரும் ஊழியர் தோட்டத்தில் உள்ள வாழை மரங்கள் சாய்ந்துவிட்டதாக கூறியது வேதனையளிக்கிறது. மங்கல காரியங்களில் தலைநிமிர்ந்து நிற்கும் வாழைமரம் இப்போது தரையில் வீழ்ந்து கிடப்பது பரிதாபமாக உள்ளது.

பயிர் காப்பீட்டு திட்டமும் சம்சாரிகளுக்கு சரியாக சென்றடையவில்லை. மூர்க்கத்தனமான இயற்கை சீற்றங்களால் விவசாயம் வறட்சியாலும் பாதிக்கப்படுகிறது, பெருமழையால்,  சூறாவளியாலும் பாதிக்கப்படுகிறது. என்ன செய்வான் விவசாயி. வியர்வை சிந்தி வேதனையை அறுவடை செய்கின்றான் பாவப்பட்ட விவசாயி இனம்.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

click me!