
தமிழகத்தில் இது வடகிழக்குப் பருவ மழைக் காலம். அத்துடன், அவ்வப்போது காற்றழுத்தத் தாழ்வு நிலையும் புயலும் என ஒரு காட்டு காட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகள் மோசமாகியுள்ளன. மரங்கள் விழுந்து போக்குவரத்து பிரச்னைக்கு உள்ளாகியுள்ளது.
சாலைகள், பாலங்கள் இவை தான் மோசமாகியுள்ளன என்று பார்த்தால், பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசுப் பேருந்துகளின் நிலையோ மிகவும் மோசமாகியிருக்கிறது. சாதாரண நாட்களிலேயே டப்பா டான்ஸாடுகின்றன என்று வாய்விட்டுச் சொல்லும் அளவுக்கு மிக மோசமான பராமரிப்பில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இந்த மழையில் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புயல் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் எல்லாம் அரசுப் பேருந்துகளின் நிலைமையும் படு மோசம்தான். வட மாவட்டங்களைப் போல் அல்லாமல், தென் மாவட்டங்களின் அரசுப் பணிமனைகளாகட்டும், பேருந்துகளாகட்டும் ஓட்டை உடைசல், பழைய பேருந்துகளைத்தான் ஒதுக்கி வைப்பார்கள். இந்த அரசுப் பேருந்துகளில் சாதாரண மழை பெய்தாலே, மக்கள் பஸ்ஸுக்குள் குடை பிடித்துச் செல்வார்கள். இப்போதோ கனமழை. இந்நிலையில் ஒரு டிரைவர் தன் இருக்கைக்கு செய்துள்ள அலங்காரங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
குளத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் TN 72 N 1193 பஸ்ஸில், டிரைவர் தன் சீட்டுக்கு மேல்,
பிளாஸ்டிக், தார்ப் பாய்களைப் போட்டு மழை நீர் ஒழுகுவதில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள படாத பாடு பட்டிருக்கிறார். ஓட்டுநருக்கே இந்த நிலைமை என்றால்...பயணிகளின் நிலைமை...?