
லட்சத்தீவிலிருந்து 270 கிமீ தொலைவிற்கு அப்பால் மையம் கொண்டிருக்கும் ஓகி புயல், தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றுவிடும் என்பதால் தமிழகத்திற்கு இனிமேல் ஓகி புயலால் எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழக கடற்கரைக்கு அப்பால் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. வரும் 6-ம் தேதி காலக்கட்டத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் 23செமீ மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏறத்தாழ 17 இடங்களில் மழை பெய்துள்ளது.
கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் புதுவையில் சராசரியை விட 5% அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சராசரியாக 36 செமீ மழை பெய்ய வேண்டும். ஆனால், 38 செமீ மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தரவை, தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை எதுவும் இல்லை. பருவத்திற்கான இயல்பான காற்றே வீசும். சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியை பொறுத்தமட்டில், ஒரிரு முறை லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.