
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப விழா களை கட்டியுள்ளது. எங்கும் அண்ணாமலையாருக்கு அரோஹரா கோஷம் விண்ணைப் பிளக்க, இன்று காலை பரணி தீபம் ஏற்றப் பட்டது. இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் எனப்படும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப் படவுள்ளது.
இந்த தீபத்தினைக் காண, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுதும் இருந்து பக்தர்கள் பலர் வந்திருக்கின்றனர். இலங்கை, மலேசியா, பிரான்ஸ், இங்கிலாந்து என உலக நாடுகளில் இருந்து இந்துக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டினரும் அண்ணாமலையின் சிறப்பைக் கேள்விப் பட்டு, தீபத்தைக் காண வந்துள்ளனர். இன்று காலை, பரணி தீபத்தை தரிசித்து விட்டு, கார்த்திகை தீபத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த சிவபக்தர் குடும்பம் ஹாய்யாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி, நின்றது பலரையும் ஆச்சரியப் படுத்தியது.
ஜடாமுடி போல் முடி வளர்த்து, தாடி வைத்துக் கொண்டு, சிவ பக்தராக அவர் நின்றிருந்த விதம் பலரது கண்களையும் கவர்வதாக இருந்தது. அவரது மனைவி வெகு சாதாரணமாக புடைவை கட்டி, ரவிக்கை அணிந்து தமிழ்ப் பெண்களைப் போல் காட்சி தந்தார். அவருடன் குழந்தைகள் இருவரும் வந்து சிவ பக்தர் குழுவுடன் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.
பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோவில்.
இந்தத் திருத்தலத்தில் கார்த்திகை திருநாள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருட தீபத் திருவிழா கடந்த நவ. 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. கோயிலுக்குப் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இதையொட்டி மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரையை புதுப்பித்து தீப நாட்டார் சமூகத்தினர் அண்மையில் கோயிலில் ஒப்படைத்தனர்.
மகா தீபம் ஏற்றத் தேவையான 3,500 கிலோ நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு கோயிலில் தயாராக இருந்தது.
தீபம் எரிய திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டர் காடா துணிக்கு கோயிலில் நேற்று முன்தினம் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
திருவிழாவையொட்டி சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன.