
திருவாரூர்
மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தக்கோரி வருகிற 29-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை வகித்தார். இதில், "மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கணிதம், கணினிஅறிவியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல் உள்ளிட்ட 12 துறைகள் உள்ளன. இவற்றுக்கு வெறும் 750 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.
ஆனால், இக்கல்லூரியில் சேர ஆண்டுதோறும் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இதனால் ஆண்டிற்கு 2200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க முடியாமல் வெளியேறும் நிலை உள்ளது.
எனவே, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி காலை நேர வகுப்புகள் அனைத்தையும் சுழற்சி முறையில் 2 பிரிவுகளாக மாலை நேரத்திலும் நடத்த வேண்டும்.
இதனை வலியுறுத்தி வருகிற 29-ஆம் தேதி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன், மாணவர் மன்ற நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், வீரபாண்டியன், அஜீத்குமார், சரவணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.