சிறந்து விளங்கும் தமிழக புலிகள் காப்பகங்கள்: பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் பாராட்டு

By SG Balan  |  First Published Apr 10, 2023, 9:01 AM IST

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட புலிகள் ஆணையத்தின் அறிக்கையில் உள்ள நிர்வாக அடிப்படையிலான தரவரிசையில் 5 தமிழக புலிகள் காப்பகங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன.


தமிழ்நாட்டில் உள்ள ஐந்து புலிகள் காப்பகங்கள் நிர்வாகத் திறனின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) ஐந்தாவது சுழற்சி சுருக்க அறிக்கை 2022 தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு பெரிய ஊக்கம் அளிக்கும் வகையில் ஆனைமலை புலிகள் காப்பகம் (ATR) மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் (MTR) ஆகியவை சிறந்த மேலாண்மை திறன் கொண்டவையாகக் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் செய்த மதிப்பீட்டில் இந்த இரண்டு புலிகள் காப்பகங்களும் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளன.

Tap to resize

Latest Videos

மேலாண்மை திறன் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட 51 புலிகள் காப்பகங்களில் சிறந்தவையாகக் கூறப்பட்டுள்ள 12 காப்பகங்களில் ஒன்றாகவும் இந்த இரண்டும் இடம்பெற்றுள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் (STR) மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் (KMTR) ஆகியவை இந்த மதிப்பீட்டில் 75 முதல் 89 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இவை மிக நல்ல புலிகள் காப்பகங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வண்டலுார் உயிரியல் பூங்காவில் மாணவர்களுக்கு சம்மர் கேம்ப் திட்டம்

புதிதாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் (SMTR) 60.94 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்று, நல்ல காப்பகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மைசூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டார். "என்டிசிஏ (NTCA) வடிவமைத்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் புலிகள் காப்பகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது" என்று தலைமை வனவிலங்கு காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி கூறியுள்ளார்.

சூழல், திட்டமிடல், உள்ளீடு, செயல்முறை, வெளிப்பாடு மற்றும் புலிகள் காப்பகத்தின் விளைவுகள் என ஆறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த 6 அடிப்படைக் கூறுகளும் 33 அளவுகோல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மனித-வனவிலங்கு மோதலைக் குறைத்தல், போதுமான மனிதவளம் மற்றும் வாகனங்கள், நிதி இருப்பு, நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் பார்வையாளர்களுக்கான சேவைகள் போன்றவை அளவுகோல்களாகக் கவனிக்கப்பட்டன.

நிலுவையில் 67 ஆயிரம் போக்சோ வழக்குகள்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உ.பி. முதலிடம்

முக்கியமான அளவுகோலாக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதா என்பது கருத்தில் கொள்ளப்பட்டது. இந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ள 51 புலிகள் காப்பகங்களுக்கும் தேசிய புலிகள் பாதுகாப்ப ஆணையத்தின் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டு மதிப்பீடு செய்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் ஆகியவற்றில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற இன்னும் முன்னேற வேண்டும் என்று கூறிய ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, "புதிதாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் படிப்படியாக முன்னேறி வருகிறது. அடுத்த சுழற்சியில் அறிக்கையில் அது நன்றாக இருக்கும்" எனக் குறிப்பிட்டார். "அடுத்த சுழற்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களும் தரவரிசையில் சிறந்து விளங்கும் என்று நம்புகிறோம்"  என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சாம்ராஜ்நகர் சபிக்கப்பட்ட பகுதியா? அரசியல்வாதிகள் அங்கு செல்வதைத் தவிர்ப்பது ஏன்?

click me!