
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில், அவரைத் தாக்கிய காவல்துறையினர் பயன்படுத்திய டெம்போ வாகனத்தின் பதிவு எண்களை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிபிஐ விசாரணையின்படி, அஜித்குமாரைத் தாக்கிய காவலர்கள் பயன்படுத்திய டெம்போ வாகனத்தில் TN 01 G 0491 மற்றும் TN 63 G 0491 என இரண்டு வெவ்வேறு நம்பர் பிளேட்டுகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக, ஒரு வாகனத்திற்கு ஒரே ஒரு பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிக்கு மாறாக, இரண்டு வெவ்வேறு எண்கள் ஒரே வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது காவல்துறையின் சட்டவிரோத நடவடிக்கையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.
மேலும், அந்த டெம்போ வாகனத்திற்குள்ளேயே இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள், மதுபாட்டில்கள், சீட்டுக் கட்டுகள் ஆகியவையும் இருந்ததாக சிபிஐ கண்டறிந்துள்ளது. அவை விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளன. கூடுதல் நம்பர் பிளேட்டுகள் எதற்காக வைக்கப்பட்டிருந்தன, இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன, காவல்துறை அதிகாரிகளால் இந்த முறைகேடுகள் ஏன் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்புகள், அஜித்குமார் மரண வழக்கில் காவல்துறை தரப்பில் நடந்த முறைகேடுகளை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த புதிய தகவல்கள் வழக்கின் போக்கை மேலும் மாற்றி, தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த 27 வயதான அஜித்குமார், கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி நகை திருட்டு வழக்கில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தீவிர விசாரணை மற்றும் கடுமையாகத் தாக்கப்பட்டதில், அவர் காவல்துறையின் பிடியிலேயே மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. காவல் துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமார் உடற்கூராய்வு அறிக்கையும், அவர் உடலில் 44 காயங்கள் இருந்ததை உறுதிப்படுத்தி, காவல்துறை சித்திரவதையை வெளிப்படுத்தியது.