
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடந்த மோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. திங்கட்கிழமை அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், 'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவதற்கான ஆவணங்கள் சிறைத் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்த நடவடிக்கைக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் 'ஏர்போர்ட்' மூர்த்தியை கைது செய்வதற்கான கடிதம், அவரது மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு ஜாமீன் கிடைப்பது தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர், திரு. மூர்த்தி என்ற ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் 14.09.2025 முதல் புழல் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஏர்போர்ட்' மூர்த்தி மீதான குண்டர் சட்டம் தொடர்பாக அவரது கட்சி மற்றும் ஆதரவாளர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.