
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மறைவில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சியினரும், அதிமுகவில் மற்றொரு அணியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் புகார் செய்து வருகின்றனர்.
முன்னதாக ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா உள்பட சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதே வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன், உயர்நீதிமன்ற நீதிபதி, தனக்கும் இதில் சந்தேகம் உள்ளது. தேவைப்பட்டால், சடலத்தை தோண்டி எடுத்து விசாரிக்க வேண்டிய நிலை வரும் என கருத்து தெரிவித்தார். இதனால், இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பு நீடித்தது.
இதைதொடர்ந்து கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தமிழக சுகாதாரத்துறை செயலாளரிடம் 5 அறிக்கைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்படைத்தது.