
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், கனரக வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உடன்வந்த இருவர் படுகாயம் அடைந்தனர். கனரக வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோட்டம்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலாங்காயம் கிராமத்தைச் சேர்ந்தவர் பர்கத்துல்லா. இவர் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ஷீ கம்பேனியில் பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று மாலை வேலை முடிந்து தன்னுடைய நண்பர்கள் இருவரை அழைத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
அந்த இரு சக்கர வாகனத்திற்கு முன் கம்பிகளை ஏற்றிக் கொண்டு கனரக வாகனம் ஒன்று சென்னையிலிருந்து, பெங்களூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
ஆம்பூர் அடுத்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாரப்பட்டு என்ற இடத்தில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியது. இதில், முன்னால் சென்றுக் கொண்டிருந்த கனரக வாகனத்தின் பின் சக்கரத்தில் அந்த இருசக்கர வாகனம் சிக்கியது.
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் பலத்த காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பர்கத்துல்லா கனரக வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள கிரிசமுத்திரம் வரை இழுத்து செல்லபட்டார். இதில், பர்கத்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைப் பார்த்த பொதுமக்கள் காயமடைந்த இருவரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த கனரக வாகனத்தின் ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த கனரக வாகனத்தின் மீது கற்கள் வீசியதில் முன்புற கண்ணாடி உடைந்தது. பின்னர் லாரியை நிறுத்திய ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடினார்.
பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வாணியம்பாடி காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தினை கலைத்தனர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கனரக வாகனத்தின் ஓட்டுனரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.