அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அப்படியே உள்ளது. தொகுதிப் பங்கீட்டை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்யவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. எனவே, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், வட மாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கின.
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு: நிறைவு செய்யும் திமுக!
மேலும், இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக தீர்மாணித்துள்ளது. எனவே, இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உடன் நேரிலும், தொலைபேசியிலும் பேச்சுவார்த்தையை நடத்தினர். இறுதியில், இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளை தவிர்த்து மாநில கட்சியுடன் கூட்டணி அமைப்பது என பாமக முடிவு செய்து அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளும் அறிவிக்கவில்லை.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம் மற்றும் ஆரணி ஆகிய தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தென் மாவட்டங்களில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் எனவும், மாநிலங்களவை சீட் ஒன்றும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் பாமக நிபந்தனை வைத்துள்ளது. இந்த நிபந்தண்னையை ஏற்றுக் கொண்டால், கூட்டணியில் இணைய பாமக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.