உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு..! சம்பிரதாயத்திற்காக மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்-ஓபிஎஸ்

Published : Jun 07, 2022, 11:38 AM IST
உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு..! சம்பிரதாயத்திற்காக மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்-ஓபிஎஸ்

சுருக்கம்

 ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போரின் காரணமாக தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவ-மாணவியர் தங்களது படிப்பினை இந்தியாவில் தொடர நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  

தமிழக மாணவர்கள் பாதிப்பு

தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே கடும் போர் நடைபெற்று வருவதன் காரணமாக, உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை பயின்று வந்த மாணவ, மாணவியர் உட்பட அங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில், அங்கு பயின்று வந்த மருத்துவப் படிப்பை பாதியிலே விட்டுவிட்டு, அதனை இந்தியாவிலும் தொடர முடியாமல் தவித்துக் கொண்டிருப்போர் சுமார் 14,000 பேர் என்றும், இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 1,896 பேர் என்றும், இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தமிழ்நாடு, உக்ரைன் மாணவர்-பெற்றோர் சங்கம் தெரிவிக்கிறது. எம்.பி.பி.எஸ். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிக பணம் கொடுத்து படிக்க முடியாத சூழ்நிலையில், குறைந்த செலவில் வெளிநாடுகளுக்குச் சென்று நிறைய பேர் மருத்துவம் பயிலுகின்றனர். இவ்வாறு வெளிநாடுகளுக்கு மருத்துவம் பயிலச் சென்றவர்களில், 1,896 தமிழர்கள் அங்குள்ள போர்சூழல் காரணமாக தமிழ்நாட்டிற்கு வந்து படிப்பை தொடர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இது ஓர் அசாதாரண சூழ்நிலை என குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு அக்கறை இல்லை

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவ, மாணவியர் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தொடர்ந்து மருத்துவம் பயில அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய நிலையில்லாத எதிர்காலத்திற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டுமென்றும், போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், இயல்பு நிலை ஏற்படுவதில் நிச்சயமற்ற போக்கு காணப்படுவதாகவும் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் மருத்துவப் படிப்பு உக்ரைனில் எந்த நிலையில் தடைபட்டதோ, அந்த நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடங்க உடனடித் தீர்வு காண தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மார்ச் மாத துவக்கத்தில் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இதற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது இங்குள்ள அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி சாதகமான உத்தரவுகளை பெற்று வரவோ எவ்வித முயற்சியையும் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை. இதிலிருந்தே, தி.மு.க. அரசிற்கு இதில் அக்கறை இல்லை என்பதும், சம்பிரதாயத்திற்காக கடிதம் எழுதப்பட்டது என்பதும் தெளிவாகிறது.

இந்தியாவில் படிப்பு தொடர வேண்டும்

அதே சமயத்தில், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் * பணத்தையும் செலவு செய்துவிட்டு, மருத்துவப் படிப்பை எப்படி தொடரச் செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். ஊக்ரைனில் நிலவும் அசாதாரண நிலையைச் சுட்டிக்காட்டி, சிறப்பு நேர்வாக, அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கும் வகையில், வழிகாட்டி நெறிமுறைகளை தளர்த்த மத்திய அரசை வலியுறுத்தி அதற்கான உத்தரவை பெற்றுத் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவுகிறது. இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. எனவே, போர் சூழல் காரணமாக உக்ரைனில் பாதியிலே மருத்துவப் படிப்பினை விட்டுவிட்டு வந்துள்ள மாணவ, மாணவியர் இந்தியாவில் அதனைத் தொடரும் வகையில், மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தினைக் கொடுத்து, சாதகமான உத்தரவினைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!