குப்பையில் கை, சாக்கடையில் கால்,கிணற்றில் தலை! 70 ஆண்டுக்கு பிறகு ஆளவந்தார் மர்டரை நினைவுப்படுத்தும் கோவை கொலை

By vinoth kumarFirst Published Sep 24, 2022, 4:39 PM IST
Highlights

கோவை மாவட்டம் துடியலூரில் வசித்து வந்த பிரபு என்ற இளைஞர் 12 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்டது கேட்கும் ஒவ்வொருவரையும் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்படுவது அவ்வப்போது நடந்தாலும் கோவை அழகு நிலைய கலைஞரின் கொலை 70 ஆண்டுகளுக்கு முன்  தமிழ்நாட்டை உலுக்கிய ஆளவந்தார் கொலையை ஞாபகப்படுத்துகிறது. 
 

குப்பை தொட்டியில் கை, சாக்கடையில் கால், பாழடைந்த கிணற்றில் தலை, குடிநீர் கிணற்றில் உடல் என கோவையில் அங்காங்கே கிடைத்த மனித உடல் பாகங்கள் அனைத்தும் கொடூரமாக கொல்லப்பட்ட அழகு நிலைய கலைஞர் ஒருவரின் உடையது தான். 

கோவை மாவட்டம் துடியலூரில் வசித்து வந்த பிரபு என்ற இளைஞர் 12 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்டது கேட்கும் ஒவ்வொருவரையும் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்படுவது அவ்வப்போது நடந்தாலும் கோவை அழகு நிலைய கலைஞரின் கொலை 70 ஆண்டுகளுக்கு முன்  தமிழ்நாட்டை உலுக்கிய ஆளவந்தார் கொலையை ஞாபகப்படுத்துகிறது. காரணம் இருவரும் ஒரே காரணத்திற்காக ஒரே மாதிரி கொல்லப்பட்டதே. சென்னையில் பேனா கடை நடத்தி வந்த ஆளவந்தார் 1950ஆம் ஆண்டில் எப்படி எதற்காக கொல்லப்பட்டார். 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே பாணியில் அதே காரணத்திற்காக கோவை அழகு நிலைய கலைஞர் கொல்லப்பட்டது எப்படி. இருவர் கொலையிலும் போலீசார் ஒரே மாதிரி போலீசார் துப்பு துலக்கியது எப்படி என்ற செய்தியை விவரிக்கிறது. 

கோவை மாவட்டம் துடியலூர் அருகே வெள்ளகிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த 15ஆம் தேதி வழக்கம் போல்  பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, குப்பைகள் லாரியில் ஏற்ற முயன்ற போது இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் இடது கை குப்பையோடு குப்பையாக கிடைந்ததை கண்டத் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே குப்பை வண்டியின் ஓட்டுநர் துடியலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கையை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இரண்டு துண்டுகளாக கிடந்த கை யாருடையது கையின் சொந்தக்காரர் என்ன ஆனார். என்பதை கண்டறிய இரண்டு ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 43 போலீசார் அடங்கிய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. துடியலூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள 250 சிசிடிவி கேமராக்களை பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. 150 தொழிற் கூடங்களிலும் 15 மருத்துவமனைகளும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட, மாநில அளவில் காணாமல் போனது தொடர்பாக 500க்கும் மேற்பட்ட நபர்களை பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 39 வயதான பிரபு என்பவர் கடந்த 14 ஆம் முதல் தேதி காணவில்லை என காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்தை போலீசார் கண்டறிந்தனர்.

இதையும் படிங்க;- மசாஜ் செய்தே பிரபு என்னை மடக்கினார்! கொலை செய்தது ஏன்? 2 கள்ளக்காதலனுடன் கைதான பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்

பின்னர், பிரபு தங்கி இருந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஏழு கைரேகைகளில் இரண்டு கைரேகைகள் துடியலுரில் துண்டிக்கப்பட்ட இடது கை ரேகையோடு ஒத்துப்போனது. இதனை அடுத்து அந்த கை பிரபு உடையது தான் என்பது உறுதிப்படுத்திய போலீசார் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பிரபு வேலை செய்து வந்ததும். அவர் குடியிருந்த பகுதியில் வசிக்கும் 39 வயது உடைய அழகு நிலையம் நடத்தி வரும் திருமணமான கவிதா என்ற பெண்ணோடு அவருக்குத் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. 

கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் கவிதா பிரபுவுக்கும் இடையே சில ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவரது ஆபாச போட்டோக்களை எடுத்து மிரட்டி வந்துள்ளார். இதனிடையே, எனக்கு அமுல் திவாகர் மற்றும் கார்த்திக்குடனும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் ஏற்பட்டது. இதையறிந்த பிரபு அவர்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கூறி, எனது ஆபாச போட்டோக்களை காட்டி, குடும்பத்தில் இருந்து உன்னை பிரித்து விடுவேன் என மிரட்டினார். நாளுக்கு நாள் அவரது டார்ச்சர் தாங்கா முடியாமல் அமுல் திவாகர், கார்த்திக்கிடம் கூறி புலம்பியுள்ளார். இதையடுத்து இடையர்பாளையத்தில் உள்ள அமுல் திவாகர் வீட்டுக்கு பிரபுவை அழைத்து சென்று கொலை செய்ய முடிவு  செய்யப்பட்டது. பிரபுவை அமுல் திவாகர், கார்த்திக் ஆகியோர் திட்டமிட்டபடி கொலை செய்து உடலை எலெக்ட்ரிக் கட்டிங் மெஷின் மூலம் 12 துண்டுகளாக வெட்டியுள்ளனர். 

தலை கிடைக்கவில்லை என்றால் வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது என்று  திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளை நம்பிய கொலையாளிகள் தலையை ஓர் இடத்திலும் மற்ற உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களிலும் வீச திட்டமிட்டுள்ளனர். துடியலூரில் கழிவுகள் கொட்டப்பட்டதால் பாழடைந்து போயிருந்த கிணறு ஒன்றை முழுமையாக மூட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து இருந்ததை அறிந்திருந்த மூன்று பேரும் பிரபுவின் தலை அந்த கிணறில் வீசிவிட்டு தப்பியுள்ளனர். எஞ்சிய உடல் பாகங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற கார்த்திக், திவாகர் ஆகியோர் இருவரும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் துடியலூர் சுற்றுவட்டார் பகுதியில் உள்ள கழிவு நீர் கிணறுகளிலும் பிரபுவின் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வீசி உள்ளனர். 

பிரபுவின் இடது கையை குப்பைத்தொட்டி ஒன்றில் வீசுவதற்காக எடுத்துச் சென்ற அவர்கள் வழியில் போலீஸ் ரோந்து வாகனம் நின்றதை பார்த்ததும் அருகில் நின்ற குப்பை லாரியில் வீசி விட்டு சென்றுள்ளனர். தலை கிடைக்காவிட்டால் உடலை அடையாளம் காணாமல் முடியாமல் போய்விடும் என்று நினைத்து வழக்கம் போல கவிதா மற்றும் அவர்களது நண்பர்கள் சுற்றிவந்த நிலையில் இடது கை ரேகையை மட்டுமே வைத்து பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டறிந்த போலீசார் அவரது செல்போனை அழைப்புகள் மூலம்  மூவரையும் நெருங்கினர்.

பிரபுவை கடைசியாக திவாகர், கார்த்திக் ஆகிய இருவர் மட்டுமே இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது கண்டறியப்பட்டதுடன் திவாகரன், பிரபு செல்போன் கடைசியாக ஒரே இடத்தில் சுவீட்ஸ் ஆப் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து கவிதா, திவாகர், கார்த்திக் ஆகியோர் 3 பேரும் சேர்ந்தே பிரபுவை கொலை செய்தது உறுதிப்படுத்திய போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். வெறும் கையை வைத்து கொலை செய்யப்பட்டவரை கண்டுபிடித்ததோடு அவரை கொன்றவர்களையும் மூன்றே நாட்களில் கைது செய்துள்ளது கோவை போலீஸ். சிறு தடையத்தை வைத்து கொலையாளிகளை தமிழ்நாடு போலீசார் கண்டுபிடிப்பது இது முதல் முறை அல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பே இதேபோன்ற வழக்கில் ஸ்காட்லாந்து போலீசார் இணையானவர்கள் என்பைத தமிழ்நாடு போலீசார் நிரூபித்துள்ளனர்.  1952 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய ஆளவந்தார் கொலை வழக்கு தான் அது.

செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்புகளை உடனுக்குடன் கண்டறியும் வசதிகள் இல்லாத 1950களில் தடவியல் துறை ஆய்வு மூலம் கொலையானரையும், கொலையாளிகளையும் தமிழ்நாடு போலீஸ் கண்டறிந்த ஆளவந்தார் கொலைக்கும் கோவை அழகு நிலைய கலைஞருக்கும் கொலைக்கும் உள்ள ஒற்றுமைகளை பார்ப்பதற்கு முன்னர் ஆளவந்தார் கொலையையும் அதனை போலீசார் கண்டறிந்து விதத்தையும் தெரிந்து கொள்வோம். 

1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னை எழும்பூரில் இருந்து சென்ற ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை அடைந்ததும் அதில் கேட்பாராற்று கிடந்த ட்ரங் பெட்டி ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். ட்ரங் பெட்டியை திறந்து பார்த்த போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் உடல் தலையில்லா முண்டமாக கிடந்தது. தலை இல்லாததால் உடல் யாருடையது என்பதை கண்டறிய போலீசார் ஒருபுறம் தீவிர விசாரணை இறங்க. ரயில் பெட்டியில் தலையில்லா முண்டம் வந்ததாம் என தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு விட்டது. 

அடுத்த சில நாட்களில் சென்னை ராயபுரம் கடற்கரையில் துணியால் சுற்றப்பட்ட மனித தலை ஒன்று கரை ஒதுங்கியது. அது பரபரப்பை அதிகரித்தது. இரண்டு இடங்களிலேமே காணாமல் போனவர்கள் பட்டியலில் தயாரித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் சென்னை பர்மா பஜாரில் பேனா கடை நடத்தி வந்த ஆளவந்தார் காணவில்லை என அவரது மனைவி புகார் அளித்தது தெரிய வந்தது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்தமாக பர்மா பஜாரில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேனா கடை நடத்தி வந்தவர் ஆளவந்தார். 

பெண்கள் விவகாரத்தில் மோசமாக நடத்தை கொண்ட ஆளவந்தார். பெண்களை கவருவதற்காக தவணை முறையில் புடவைகள் விற்றதும் புடவை வாங்க வந்த கேரளாவை சேர்ந்தவரும் ராயபுரத்தில் தங்கி இருந்தவருமான தேவகி என்ற இளம் பெண்ணோடு தவறான உறவு இருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனால் ராயபுரம் கடற்கரையில் ஒதுங்கியது ஆளவந்தாரின் தலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ராமேஸ்வரம் ரயிலில் கண்டறிந்து பெற்ற உடலை சென்னை வரவழைத்து இரண்டையும் பொருத்திப் பார்த்தபோது சரியாக இருந்தது. இதனால், ஆளவந்தார் கொலை செய்யப்பட்டது உறுதியானது. அவரது மனைவியும் ஆளவந்தாரின் உடலல்தான் என்பதை உறுதிப்படுத்தியதால் அவரை கொலை செய்தவர்களை பிடிப்பதற்காக தேடுதல் வேட்டை தொடங்கியது. 

1952 ஆகஸ்ட் 28ஆம் தேதி கடைசியாக கடையில் இருந்த புறப்பட்ட ஆளவந்தார். ராயபுரம் தேவகி வீட்டுக்கு போவதாக சொல்லிவிட்டு தான் சென்றார் என அருகில் இருந்த கடைக்காரர்கள் கூறியதால் அங்கு இருந்து விசாரணையை தொடங்க போலீசார் சென்ற போது தேவகி  தளது கணவர் மேனனுடன் தலைமறைவாகி இருந்தார். ஏற்கனவே ஆளவந்தார் மனைவி சென்று தேவகியிடம் தனது கணவர் குறித்து விசாரித்த போது தனக்கு அப்படி யாரையும் தெரியாது என்று மறுத்திருந்த நிலையில் அவர் தலைமறைவானது சந்தேகத்தை உறுதி செய்தது. பெரிய அளவில் தொழில்நுட்பம் வளராத 1950களில் ஆளவந்தார் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டதும் தலை சென்னையிலும் உடல் ராமேஸ்வரத்திலும் கிடைத்ததும் ஒட்டுமொத்த தமிழ் நாட்டிலும் பேசு பொருளானது. திரும்பிய பக்கம் எல்லாம் ஆளவந்தார் கொலை வழக்கு பற்றிய பேச்சு எழுந்ததால் குற்றவாளிகள் பற்றிய துப்புக் கொடுப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ராயபுரம் போலீசார் படத்துடன் வெளியிட்டிருந்தனர். இதனால் நெருக்கடிக்கு ஆளான இருவரும் சில நாட்களில் போலீசில் சரணடைந்தனர்.

தேவகியும் அவரது கணவர் மேனனை போலீசார் விசாரணை செய்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ஏதோ ஒரு கட்டத்தில் ஆளவந்தாருடன் தொடர்பை ஏற்படுத்திய தேவகி. மேனனை திருமணம் செய்ய முடிவு செய்தவுடன் தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால் ஆளவந்தார் இதனை ஏற்க மறுத்து திருமணத்திற்கு பின்னரும் தேவகியை மிரட்டி வந்துள்ளார். வேறு வழியில்லாமல் ஆளவந்தாரை கொலை செய்ய தேவகியும்,  கணவர் மேனனும் முடிவு செய்தார். 

சம்பவம் நடந்த அன்று ஆளவந்தாரை வீட்டுக்கு அழைத்த தேவகி, ஆளவந்தார் அங்கு வந்தவுடன் பாலில் மயக்கம் மருந்து கொடுத்து கணவர் மேனனோடு சேர்ந்து ஆளவந்தாரை உடலை கொன்று அடையாளம் தெரியாத அளவுக்கு உடலை துண்டு துண்டாக இருவரும் சேர்ந்து வெட்டியுள்ளனர்.  பின்னர் அவரது உடல் எப்படி அப்புறப்படுத்துவது யோசித்தபோதுதான் உடலை ரயிலிலும், தலையை கடலிலும் வீசும் திட்டம் உருவானது. அதன்படி மேனன் பாரிமுனைக்கு சென்று ஒரு பெரிய ட்ரங்க் பெட்டியை வாங்கி வந்து உடலை அதில் போட்டு சங்கிலியை பிணைத்து பூட்டு போட்டு பூட்டியுள்ளார். 

தலையை ஒரு சட்டத் துணியில் பொட்டலமாக கட்டி ராயபுரம் கடலில் தூக்கி வீசிவிட்டு ரிக்‌ஷா ஒன்றை பிடித்துக் கொண்டு ட்ரங்க் பெட்டியை ரிக்‌ஷாவில் ஏற்றிக் கொண்டு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்ட் இருக்கையில் அடியில் வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். கடலில் வீசிய தலையை மீன்களை சாப்பிட்டு விடும் என நினைத்திருந்த தேவகி மற்றும் அவரது கணவர் மேனன் ஆகியோர் தலை கரை ஒதுங்கிய தகவலை அறிந்ததும் மும்பைக்கு தப்பி சென்றுள்ளனர். ஆனால் தமிழ்நாடு முழுவதும் ஆளவந்தார் கொலை வழக்கு பரப்பாக பேசப்பட்டு போலீஸ் விசாரணை தீவிரமடைந்ததால் இருவரும் சென்னை திரும்பி போலீசில் சரணடைந்தனர். நீதிமன்றத்தில் மூன்றாண்டுகளாக  நடந்த வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. தேவகிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், கொலையை அரங்கேற்றிய அவரது கணவருக்கு மேனனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

பின்னர், இந்த கதை நாவலாகவும், தொலைக்காட்சிகளில் தொடராகவும் வெளிவந்தது. இந்நிலையில், 70 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கு தற்போது நினைவு கூறுவதற்கு காரணம் கோவையில் நடந்த அழகு நிலை கலைஞரின் கொடூர கொலைதான். ஆளவந்தார், அழகு நிலைய கலைஞர் பிரபு இருவருமே பெண் ஆசையால் உயிரை விட்டவர்கள் இருவருமே தவறான உறவிலிருந்து பெண்ணின் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள். இருவரது உடல்களுமே துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டவைகள் இரண்டு வழக்குகளிலும் போலீசார் மதி நுட்பத்துடன் விசாரணை கொலை செய்யப்பட்டவர்கயைும், கொலையாளிகளையும் கண்டுபிடிக்க உதவி உள்ளது. 

இதையும் படிங்க;- மசாஜ் செய்தே பிரபு என்னை மடக்கினார்! கொலை செய்தது ஏன்? 2 கள்ளக்காதலனுடன் கைதான பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்

click me!