
தெற்கு கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் வரும் 5 ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. கோடை காலம்போல் அடிக்கும் வெயிலால் பொது மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் இரவில் பனி கொட்டி வருகிறது. அதிகாலையில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருவதோடு மட்டுமல்லாமல் மூடுபனி நிலவி வருவதால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 2 மாதங்களாக மழை, மழைக்கான அறிகுறி என எதுவுமே இல்லாமல் வறண்ட வானிலையே காணப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழகத்தில் ஓரளவு மழை பெய்ததால், தணிணீர் பஞ்சமும் தற்போது ஓரளவு இல்லாமல் இருந்து வருகிறது.
ஆனால் நாட்கள் செல்ல, செல்ல வறண்ட வானிலையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்ட மக்களுக்கு ஓர் நல்ல செய்தியை அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 5 ஆம் தேதி தென்கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும்மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கரலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.