
தொழில்நுட்பம், செல்போன், இண்டர்நெட் ஆகியவற்றின் அதீத வளர்ச்சியால் ஆக்கப்பூர்வமான செயல்கள் மட்டுமல்லாமல் எதிர்மறையான செயல்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கீழ தட்டப்பாறை மேலத்தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருக்கு இரண்டு மகன்களும் 6 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று சின்னத்தம்பியின் மனைவி வேலைக்கு சென்றுவிட்டார். அவரது இரு மகன்களும் அந்த ஊரில் உள்ள அங்கன்வாடி பள்ளி கூடத்திற்கு சென்றுவிட்டனர்.
சின்னத்தம்பியும் வெளியே செல்ல, வீட்டில் 6 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். திடீரென அந்த வீட்டிலிருந்து புகை வெளியேற, பக்கத்து வீட்டு 14 வயது சிறுவன், சிறுமியின் சகோதரர்கள் படிக்கும் அங்கன்வாடிக்கு சென்று தகவல் கொடுத்துள்ளான். இதையடுத்து தகவலறிந்த ஊர் மக்கள், உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்க, சிறுமி பாதி எரிந்த நிலையில், கிடந்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போதுதான் போலீசார் அதிர்ந்து போயினர். அதுவரை, சிறுமி சமைக்க முயன்று தவறாக தீப்பற்றியிருக்கலாம் என நினைத்த போலீசாருக்கு துப்பு கிடைத்தது. சிறுமியின் ஆடையில் இரத்த கறை இருந்தது. அதைக் கண்ட போலீசார், உடனடியாக தகவல் கொடுத்த 14 வயது சிறுவனை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான் சிறுவன். அப்போது, சிறுமி சத்தம் போட முயன்றதால் சிறுமியை தாக்கி கொலை செய்துள்ளான். அதன்பிறகு வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை சிறுமி மீது ஊற்றி எரித்துள்ளான். சிறுமியை அவனே கொன்று எரித்து விட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக, அவனே தகவலும் கொடுத்துள்ளான்.
தந்தை இல்லாததால், தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த அந்த சிறுவன், தான் தோன்றி தனமாக திரிந்துள்ளான். நண்பர்கள் செல்போனில் காட்டிய ஆபாச படங்களை பார்த்து, அவனது மனதிற்குள் தவறான எண்ணங்களை வளர்க்க ஆரம்பித்துவிட்டான். ஆபாச படங்களை பார்த்து கெட்டுப்போன அவன், படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு ஊரில் அவ்வப்போது சிறுமிகளிடம் சில்மிஷங்களை செய்துவந்துள்ளான். அதை அந்த ஊர் மக்களும் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறி கொலையும் செய்துள்ளான்.
இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஒழுக்க சீர்கேட்டாலும், முறையாக வளர்க்காததாலும் இந்த குற்றம் அரங்கேறியுள்ளது.
செல்போன் நலிவடைந்துவிட்ட இந்த தருணத்தில் சிறுவர்களும் அதை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. ஆனால் குழந்தைகள் செல்போனில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதும் ஒழுக்கமாக வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.