
திருச்சி
தமிழகத்தில் விவசாயிகள் பாதிப்படையக் கூடிய எந்த திட்டமானாலும், ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு செயல்படுத்தாது என்ற உறுதியை ஏற்று, நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நெடுவாசல் கிராம பிரதிநிதிகளை முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள கலை அரங்கத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.623 கோடியே 56 இலட்சம் மதிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் இடைப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் திருச்சிக்குச் சென்றார்.
இந்த விழா மேடைக்கு முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வந்ததும் மேடையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலிச் செலுத்தினார். அவருடன் மற்ற அமைச்சர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் தொடங்கிற்று. தமிழக நெடுஞ்சாலை துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்று பேசினார்.
அதன் பின்னர் காணொலி காட்சி மூலம் திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.110 கோடியே 4 இலட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இரண்டாவதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.132 கோடியே 74 இலட்சம் மதிப்பில் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். இதற்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் இருந்தபடியே நன்றித் தெரிவித்துப் பேசினார்கள்.
அதன் பின்னர் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசியது:
“இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களில் பெரும்பாலானவை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களாகும். இத்திட்டங்கள் பல நிறைவு செய்யப்பட்டு விட்டன. மீதமுள்ள திட்டங்களும் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா மக்களின் முதல்வராக விளங்கினார். உலக தலைவர்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரி தலைவராக விளங்கினார் ஜெயலலிதா. அவரது ஆட்சியின் தொடர்ச்சி தான் இந்த ஆட்சி. எனவே ஜெயலலிதாவின் எண்ணங்களையும், விருப்பங்களையும் ஈடேற்றும் அரசாகவே இந்த அரசு செயல்படும்.
விவசாயிகளுக்கு எப்போதெல்லாம் இயற்கை இடர்பாடுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களையும், நிவாரணங்களையும் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாத்து வந்தார். இது ஜெயலலிதா அரசு என்பதனால் நாங்கள் விவசாயிகளை கனிவோடு பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோம்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலியம் சுரங்க குத்தகை உரிமம் மாநில அரசு வழங்கவில்லை எனவும், விவசாயிகள் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளதால் நெடுவாசல் கிராமத்தில் இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்றும், எனவே நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை எனவும் ஏற்கனவே தெரிவித்தேன்.
தமிழகத்தில் விவசாயிகள் பாதிப்படையக் கூடிய எந்த திட்டமானாலும், ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு செயல்படுத்தாது எனவும், மாநில அரசின் இந்த உறுதியை ஏற்று, நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் நெடுவாசல் கிராம பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டேன்.
இது மக்கள் அரசு. மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவி சாய்ந்து விரைந்து செயல்படுத்தும் அரசு என்பதால் மீண்டும் நான் உறுதி கூறுகிறேன்,
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசு அலுவலர்களும் உள்ளன்போடும், உறுதியோடும் உங்களுக்காக உழைப்பார்கள் என்று உறுதி கூறுகிறேன்” என்று அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் இடைப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். முன்னதாக அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளையும் கொடி அசைத்து இடைப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முடிவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நன்றித் தெரிவித்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், காமராஜ், துரைக்கண்ணு, எம்.ஆர். விஜயபாஸ்கர், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், வைத்திலிங்கம் எம்.பி., டி. ரத்தினவேல் எம்.பி. உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கார் மூலம் திருநெல்வேலிக்கு புறப்பட்டார்.