
வெள்ளியணையில் தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கக் கூடாது என்றும், மீறி அமைக்க முற்பட்டால் தொடர் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கரூர் மாவட்டத்தில் பாக நத்தம், மூக்கணாங்குறிச்சி, வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாகம், கே.பிச்சம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகள் உள்ளன.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இங்கிருக்கும் நிலங்களை வாங்கி காற்றாலை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வந்தது.
இதனையடுத்து அந்த ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுச் சேர்ந்து காற்றாலை அமைப்பதால் தங்கள் பகுதியின் வாழ்வாதாரமான விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். எங்கள் பிள்ளைகள் உள்பட இங்கு வசிக்கும் அனைவரும் சோற்றுக்கு கையேந்தும் நிலை ஏற்படும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
பின்னர், காற்றாலை அமைக்கும் தனியார் நிறுவனமும், அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியது. அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தியது.
அதில், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி புதிய காற்றாலைகள் அமைக்கப்படக் கூடாது என்றும், பணிகள் முடிந்த காற்றாலைகளை நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இயக்கக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தற்போது அந்த உடன்படிக்கையை மீறி காற்றாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறி இந்த ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெள்ளியணை அருகே உள்ள மூக்கணாங்குறிச்சி தெற்கு பகுதியில் பந்தல் அமைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நேற்று நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என்று போராட்டக் குழுவினர் எச்சரித்தனர்.