சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
Tamil Nadu Assembly No Confidence Motion : சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக சார்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து அப்பாவு சபாநாயகர் நாற்காழியில் இருந்து சென்ற நிலையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவையை நடத்தினார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வெளிநடப்பு செய்தால் "போங்க, போங்க" என சபாநாயகர் கிண்டல் செய்கிறார், ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக சார்பாக கொடுக்கப்படும் கவனஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்து கொள்ளப்படுவதில்லை, பேரவையின் மரபையும் கண்ணியத்தையும் சபாநாயகர் காக்கவில்லை என பேசினார்.
இபிஎஸ் குற்றச்சாட்டு
தொடர்ந்து பேசிய அவர், பேரவை தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை, ஆளுங்கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப குறைந்த நாட்களே சபாநாயகர் பேரவை நிகழ்வை நடத்தி உள்ளார். கருப்பு சட்டை அணிந்து வந்ததால் அதிமுக உறுப்பினர்களை காண்பிக்காமல் தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நான் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, நேர்மையான கருத்துக்களை ஆணித்தனமாக முன்னிறுத்தக் கூடிய பண்புகளை கொண்டவர், அதனால்தான் அப்பாவுவை சபாநாயகர் பதவிக்கு நான் தேர்ந்தெடுத்தேன்
அன்பும் பாசமும் கொண்டவர்
இவர் இல்லையென்றால் அவை கன்னித்தொடு நடைபெறாது, இந்த அவையில் என்னுடைய தலையிடும் அமைச்சரின் தலையிடோ இருக்காது, அந்த வகையில் தான் அப்பாவு அவர்கள் செயல்பட்டு வருகிறார் . எதிர்க்கட்சி உறுப்பினர்களிடன் பாசம் மற்றும் அன்பு கொண்டு செயல்படுபவர் பேரவை தலைவர் என்பதை மனசாட்சியோடு சிந்திக்க கூடியவர்கள் ஒப்புக்கொள்வார்கள், சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கண் ஜாடையில் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இந்த தீர்மானம் கொண்டு வந்திருப்பதை பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பது தான் உண்மை"
உட்கட்சி பிரச்சனை திசை திருப்ப திட்டமா.?
உண்மைக்கு மாறான செய்திகள் தீர்மானத்தில் உள்ளதால் பேரவை தலைவரின் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய பொறுப்பு முதல்வரான எனக்கு உள்ளது. அமளியில் ஈடுபடுபவர்களை அமைதிப்படுத்தவே சபாநாயகர் விரும்புவார், அவையில் இருந்து வெளியேற்ற விரும்ப மாட்டார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் பேசினார். அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையை திசைத்திருப்ப இந்த தீர்மானமா? என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், "எதிர்க்கட்சியின் இந்த அம்பை அவை ஏற்காது என கூறினார்.
பதிவான வாக்குகள் எத்தனை.?
இதனையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், குரல் வாக்கெடுப்புக்கு பின் நடைபெற்ற டிவிஷன் முறையிலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக - 63 வாக்குகளும், தீர்மானத்திற்கு எதிராக - 154 வாக்குகளும் பதிவானது. அதே நேரம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக, பாமக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.