பொது சிவில் சட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் அமெரிக்கை நாராயணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்திற்குப் பின் அதிமுகவின் மதுரை மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டுப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் பொது சிவில் சட்டம் தொடர்பாக அதிமுகவின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதே அதிமுகவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டதாகத் தெரிவித்தார். அதே நிலைப்பாட்டில் தான் தற்போதும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
2019ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்ப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்து அதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் தொடர்வதாகக் கருதப்படும் சூழலில் ஈபிஎஸ் இவ்வாறு பேசியுள்ளார்.
பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜவினர் தமிழகத்தில் பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசிவரும் நிலையில் அதிமுக அந்தச் சட்டத்தை எதிர்ப்பதாக எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் அமெரிக்கை நாராயணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அதிமுகவும் எடுத்துள்ள சரியான மற்றும் துணிச்சலான முடிவு என்று அவர் பாராட்டியுள்ளார்.