
தவெக பொதுக்குழு கூட்டம் கடந்த புதன் கிழமை நடைபெற்றது. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டம் என்பதால் இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பொதுக்குழுவில் பேசிய கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆவேசமாக பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “தமிழகத்தில் பேசிப் பேசி வளர்ந்த கட்சி திமுக. தமிழகத்தில் முதல் முறையாக விஜய் மௌனப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். உங்களிடம் பாவமன்னிப்பு கேட்டக் கொள்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கு 10 ஆண்டுகள் வேலை பார்த்ததற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தலைவர் விஜய் கரூருக்கு செல்லவில்லை என்று விமர்சனம் உள்ளது. அதற்கு நான் பதில் சொல்கிறேன். கரூர் காவல்துறை வினோதமான காவல்துறை. 8 நாட்களுக்கு முன்பாக அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் மனு அளித்தோம். காவல் துறையை நாங்கள் முழுமையாக நம்பியது தான் எங்கள் தவறு. இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
இந்த தெரு வழியாக வாருங்கள் பத்திரமாக நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என உறுதி அளித்தனர். மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கிறோம். திருச்செந்தூர் கோவிலில் திடீரென 20 லட்சம் பேர் கூடினால் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது போன்ற பாதுகாப்பை காவல் துறை செய்திருக்க வேண்டும்.
தலைவர் விஜய் அமைதி புரட்சி மேற்கொண்ட போது பெரிய மீசை வைத்த நபர் ஒருவர் அவரை சட்டையை பிடித்து அடிப்பேன் என்று பேசினார். பத்திரிகையாளர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா..? தைரியம் இருந்தால் தொடு டா பார்க்கலாம். முடிந்தால் எங்கள் தலைவரின் வீட்டிற்குள் சென்று பார்.. எங்களுக்கு இதுபோன்ற அரசியலை மேற்கொள்ளத் தெரியாது என்று பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை குறிப்பிட்டு பேசியது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.