
Why Vijay did not oppose AIADMK : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் தேர்தல் பயணத்தை செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளார். முன்னதாக ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பொதுச்செயலாளர் ஆனந்த் பேசுகையில், வருகின்ற 2026 ஆம் ஆண்டில் தலைவர் விஜய் முதலமைச்சராக அமர்வது உறுதி, எந்த சந்தேகம் கிடையாது. பல ஆண்டுகள் பொறுத்துக் கொண்டிருந்து விட்டீர்கள், இன்னும் 8 மாதம் பொறுத்து இருங்கள் 2026 ஆம் ஆண்டு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை செய்யக்கூடிய தலைவராக விஜய் இருப்பார் என தெரிவித்தார்.
முன்னதாக பேசிய தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, திமுகவிற்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. அதற்கு பதில் கொடுக்கிறோம்.. 1967 ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கும்போது கொள்கை ஆட்சியை உருவாக்கினார். கொள்கை திமுகவை உருவாக்கினார். திமுகவுடன் எம்ஜிஆர் பயணம் செய்து கடுமையான போராட்டங்களில் பங்கேற்று, அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் மாநிலக் கட்சியாக திமுக தேசிய கட்சியை எதிர்த்து ஆட்சி அமைத்தது. அண்ணா மறைவிற்குப் பிறகு எம்ஜிஆர் துணையுடன் கருணாநிதி முதலமைச்சரானார்; அப்பொழுது எம்ஜிஆருக்கு தன்னுடைய நண்பர் முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்தார்.
அப்பொழுதுதான் அண்ணா உருவாக்கிய கொள்கை திமுக அல்ல, கொள்ளை திமுக என அப்பொழுது தான் எம்ஜிஆர்க்கு புரிந்தது.எம்ஜிஆர் ஒரு உணர்வில் தீயசக்தி தமிழகத்தை ஆண்டு வருகிறது என்று உணர்ந்து அதிமுகவை உருவாக்கினாரோ; அதேபோன்று தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் அதே உணர்வுடன் உருவாக்கியுள்ளார். திமுக எங்கு வலுவிழந்து கிடைக்கிறது, எதனால் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு திமுகவின் ஊழல்தான் பாஜகவை வளர்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவை ஏன் எதிர்க்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்,
கடந்த ஆட்சியில் ஜிஎஸ்டி, நீட் தேர்வு, சிஐஏ எல்லாம் போராட்டங்களிலும் அன்றைக்கு இருந்த ஆளும் அதிமுக அரசு பாஜகவுடன் அரசுடன் சேர்ந்து பயணித்தபோது தமிழக வெற்றிக்கழகத்தின் குரல் ஒலித்தது. நீட்தேர்வு, ஜல்லிக்கட்டு, சிஐஏ போன்றவற்றிற்கு எதிராக போராட்டம் விஜய் பங்கேற்றார் அப்பொழுது அரசியல்வாதியாக அல்ல; சாமானிய மனிதனாக பங்கேற்றார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் ஒரே குறிக்கோள் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதை உருவாக்கினோம். பாஜகவுக்கு எதிரான குரலுடன் இருந்த அதிமுக இன்றைக்கு பாஜகவை பின்புற வாசல் வழியாக வரவேற்று கூட்டணியை உருவாக்கி, கூட்டணி தலைவர் யார் என்று இதுவரை தெரியவில்லை.. அதிமுக நாங்கள்தான் தலைவர், என்றும், முதல்வர் யார் என்றால் பாஜக அமித்ஷா தான் சொல்வார் என்று கூறுகிறார்கள். வலுவிழந்து இருக்கும் தலைமை..எனவே தமிழக வெற்றிக்கழகம் ஏன் எதிர்க்கவில்லை என்றால் அதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களும் எப்போதே தமிழக வெற்றி கழகத்தின் இணைந்துவிட்டார்கள் என தெரிவித்தார்.
எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோர் எந்த கொள்கையுடன் அதிமுகவை ஆரம்பித்து நடத்தினார்களோ; அந்த குறிக்கோளின் ஒற்றை நம்பிக்கை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான். கொள்கையற்ற அரசியலால் தான் சுலபமாக கடந்த மூன்று தேர்தலில் வெற்றி பெற்றது; ஆனால் இனி வெற்றி பெற முடியாது. ஏனென்றால் உங்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்கள் பாஜகவிடம் சரணடைந்தவர்கள் அல்ல;பாஜகவை துணிந்து எதிர்க்கின்ற ஒரே தலைவர் விஜய் தான் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.