Commissioner Arun : சென்னை மாநகரக் காவல் ஆணையராக அருண் நியமனம்.! யார் இவர்.? அச்சத்தில் ரவுடிகள்

By Ajmal Khan  |  First Published Jul 8, 2024, 1:21 PM IST

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேள்வி எழுந்த நிலையில், சென்னை காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்திப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய ஆணையராக ஏடிஜிபி அருண் நியமிக்கப்பட்டுள்ளார். 


சென்னையில் தொடரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை

சென்னையில் தொடர் கொலைகள், போதைப்பொருள் விற்பனை என அடுத்தடுத்து புகார்கள் வெளிவந்த நிலையில், காவல்துறையினருக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. திமுக அரசின் செயல்பாட்டை விமர்சிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் மாற்றம்- அருண் நியமனம்

இந்தநிலையில் யார் இந்த அருண் ஐபிஎஸ் என்ற கேள்வி எழுந்துள்ளது.  தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வந்த அருண் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார். 1998 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்வர்  நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

 

யார் இந்த அருண்

இதனையடுத்து  கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணாநகர் மற்றும் செய்ன்ட் தாமாஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் துணை ஆணையராக பணியாற்றியுள்ளார். சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் - ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.  காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக 2016 ஆம் ஆண்டு பணியாற்றினார். 2022 ஆம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று,ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்தார்.

அச்சத்தில் ரவுடிகள்

தொடர்ந்து  சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இந்தநிலையில் சென்னை மாநகர ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.  பல மாவட்டங்களில் ரவுடிகளை வேட்டையாடி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றிய அருண் போன்ற நேர்மையான அதிகாரிகளை சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர். அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டது  ரவுடிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!