நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அபராமின்றி மின்கட்டணத்தை செலுத்த பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அபராமின்றி மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜனவரி 2 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 02.01.2024 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் 01.02.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், வீடு மற்றும் தொழிற்கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.