நடிகர் விஜய் எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாள் விழா, பட்டாசு வெடித்து 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஜன்னலை திறந்து கடலில் குதிக்க போறேன்: நடுவானில் விமானத்தில் பயணி தகராறு
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா துறைகளையும் கைப்பற்றுவார்கள். அதைப்போல சினிமாத்துறையையும் கைப்பற்றி உள்ளனர். திமுகவினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு திமுக எதையும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த ஆட்சியில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. உதவியையும், பணத்தையும் தகுதி பார்த்து கொடுக்கிறார்கள். திமுக ஆட்சியை எதிர்த்து பேசினால் அடக்குமுறைகளால் அடக்கப்பார்க்கின்றனர் எனவும் செல்லூர் ராஜு குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது பற்றி பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “தமிழகத்தில் இது ஒரு பண்பு. யார் வாழ்த்து சொன்னாலும் எங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம். எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்துவது அவர்களுக்கும் பெருமை. எங்களுக்கும் பெருமை. நடிகர் விஜய் நன்றாக செயல்படக்கூடியவர். அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி. எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வேப்பம்பரம் போல் பட்டு போச்சு என்று பிற கட்சிகள் அதிமுகவை நினைத்தார்கள்? அது நிறைவேறாது. அதிமுக கட்சி பீனிக்ஸ் பறவை போல அழிவது போல தெரியும். ஆனால் வீறு கொண்டு எழும். அதிமுகவை தேடி பெரும்பாலான இளைஞர்கள் வருகிறார்கள் அதிமுக வேடந்தாங்கல் பறவையைப் போல.” என்றார். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தினார்.