
சேலம்
சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ராஜன், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னை இரயில்வே காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜோர்ஜி ஜார்ஜ் சேலம் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோர்ஜி ஜார்ஜ் ஏற்கனவே சேலம் மாநகரில் துணை காவல் ஆணையராக பணியாற்றியவர். இவர் நேற்று காலை சேலம் மாவட்ட புதிய கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து ஜோர்ஜி ஜார்ஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "சேலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
குற்ற வழக்குகளில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று கொடுக்கப்படும். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்படும்.
மக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு தேவையான பாதுகாப்பு கொடுப்பதே முதல் கடமையாகும்.
லாட்டரி சீட்டு மற்றும் சந்துக்கடை மூலம் சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் காவலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட குற்றப் பிரிவில் தேங்கி கிடக்கும் வழக்குகளும் விரைந்து முடிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளரை காவல் உயரதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.