விபத்துகளை தடுக்க இப்படியொரு யோசனையா? போலீஸை நிச்சயம் பாராட்டியே ஆகணும்...

First Published May 19, 2018, 8:12 AM IST
Highlights
Such a suggestion to prevent accidents? The police will definitely appreciate


இராமநாதபுரம்
 
இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ஓட்டுநர்களுக்கு தூக்கத்தில் இருந்து மீட்கும் வகையில் தேநீர் மற்றும் குடிநீர் வழங்கி, புத்துணர்ச்சியை அளிக்கின்றனர் காவலாளர்கள். 

இராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 15-ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் இருந்து சென்ற சுற்றுலா வேன் அந்த வழியாக சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் நால்வர் பலியானார்கள். 14 பேர் பலத்த காயமடைந்தனர். 

மேலும், சத்திரக்குடி அருகே நடந்த விபத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த இரண்டு விபத்துகளிலும் வாகனங்களை ஓட்டிவந்த ஓட்டுநர்கள் தூங்கியதே காரணம் என்று தெரியவந்துள்ளது. பொதுவாக சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ஓய்வின்றி தொடர்ந்து வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதனால் விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.

குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்திலேயே இதுபோன்ற விபத்துகள் நடப்பது அதிகம். எனவே, இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா இனிமையான பாதுகாப்புமிக்க பயணம் என்ற பெயரில் வாகன ஓட்டுனர்களை வரவேற்று தேநீர் மற்றும் குடிநீர் வழங்கி புத்துணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார்.

இதன்படி கிழக்கு கடற்கரை சாலையில், சாயல்குடி மற்றும் தொண்டி அருகிலும், மதுரை -  இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகிலும் தலா ஒரு ஆய்வாளர், இரண்டு காவலாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவலாளர்களுடன் இணைந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை நிறுத்தி வரவேற்று, வாகன ஓட்டுனர்களுக்கு தேநீர் மற்றும் குடிநீர் வழங்கி புத்துணர்வு அளிக்கின்றனர். மேலும், சாலை பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தியும் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி காவலாளர்கள் மேற்கண்ட இடங்களில் மாவட்ட எல்லையில் நுழையும் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் மற்றும் குடிநீர் வழங்கி புத்துணர்வு பெறச்செய்து வழி அனுப்பி வருகின்றனர். 

காவலாளர்களிடன் இந்த சமுதாய பாதுகாப்பு பணியினை இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டுனர்களும் பாராட்டி செல்கின்றனர்.

click me!