
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மோதி கொண்டதில் 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தென்மாவட்டத்தில் இருந்து அரசு பஸ் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிங்கப் பெருமாள் கோயில் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து, ஒரகடம் நோக்கி தனியார் பஸ் பஸ் சென்றது. சாலை சந்திப்பு திருப்பதில், இரண்டு பஸ்களும் நேருக்கு நேராக பயங்கர சத்தத்துடன் மோதி கொண்டது. இதில், அரசு பஸ்சில் பயணம் செய்த 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் முதல் மதுராந்தகம் வரை ஜிஎஸ்டி சாலையில் அடிக்க விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில் அருகே அடிக்கடி விபத்துகள் நடந்துவருகின்றன.
தென் மாவட்டத்தை பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அரசு மற்றும் தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.