
சென்னையில் கடந்த 14 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.8.64 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 27.05.2022 முதல் 10.06.2022 வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
| சென்னை மாநகராட்சி | குப்பைகள் கொட்டிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதம் | கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதம் | சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதம்
|
| திருவொற்றியூர் | ரூ.19,200 | ரூ.38,500 | ரூ.3,500 |
| மணலி | ரூ.10,000 | ரூ.4,000 | ரூ.3,000 |
| மாதவரம் | ரூ. 19,000 | ரூ.8,000 | ரூ.6,300 |
| தண்டையார்பேட்டை | ரூ.12,000 | ரூ.6,000 | ரூ.7,500 |
| இராயபுரம் | ரூ.17,500 | ரூ.17,000 | ரூ.5,000 |
| திரு.வி.க.நகர் | ரூ.32,200 | ரூ.37,000 | ரூ.8,200 |
| அம்பத்தூர் | ரூ.22,000 | ரூ.17,500 | ரூ.6,750 |
| அண்ணாநகர் | ரூ.21,500 | ரூ.14,000 | ரூ.4,900 |
| தேனாம்பேட்டை | ரூ.31,300 | ரூ.44,000 | ரூ.5,000 |
| கோடம்பாக்கம் | ரூ.23,000 | ரூ.81,000 | ரூ.6,500 |
| வளசரவாக்கம் | ரூ.33,400 | ரூ.31,000 | ரூ.4,900 |
| ஆலந்தூர் | ரூ.24,800 | ரூ.8,000 | ரூ.5,000 |
| அடையாறு | ரூ.9,500 | ரூ.33,000 | 0 |
| பெருங்குடி | ரூ.50,000 | ரூ.35,000 | ரூ.5,000 |
| சோழிங்கநல்லூர் | ரூ.60,000 | ரூ.30,000 | ரூ.3,500 |
| மொத்தம் | ரூ.3,85,400 | ரூ.4,04,000 | ரூ.75,050 |
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக 184 புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தெரிவித்துள்ளார்.