
தஞ்சாவூர்
தஞ்சாவூரில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கல்லூரி மைதானத்தை சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு வந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்து வந்த வாகனங்கள், மாநகராட்சி மைதானம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இதற்காக கல்லூரி மைதானத்தில் கிராவல் மண் கொடப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு அப்போதே மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே அதிகாரிகள் தலையிட்டு, விழா முடிந்தவுடன் மைதானத்தை சீரமைத்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதனை ஏற்ற மாணவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆனால், விழா முடிந்து 21 நாள்கள் ஆகியும் மைதானத்தை சரிவர சீரமைத்து தரவில்லை. கல்லூரி முன்பு வேகத்தடையும் அமைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் மைதானத்தை சீரமைத்து தரக் கோரி நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்லூரியைவிட்டு வெளியே வந்து வல்லம் எண்-1 சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரவிந்த்சாமி தலைமை வகித்தார்.
போராட்டம் குறித்து அறிந்த வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தங்கபிரபாகரன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கோ, காவல் ஆய்வாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவர்கள், "மைதானத்தை முழுமையாக சீரமைத்து தர வேண்டும்.
கல்லூரி சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால் மர்மநபர்கள், கல்லூரிக்குள் வந்து வேண்டப்படாத சில சம்பவங்களை செய்துவிட்டு செல்கின்றனர். எனவே, சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டிக் கொடுக்க வேண்டும்.
கல்லூரி முன்பு போடப்பட்டிருந்த வேகத்தடை அகற்றப்பட்டதால் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
இதைக் கேட்ட அதிகாரிகள், "மைதானத்தை ஏற்கனவே சீரமைத்து கொடுத்து இருக்கிறோம். சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும் என்றால் கல்லூரி நிர்வாகத்திடம் முறையீடு செய்தால் அவர்கள் பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றுச்சுவரை உயர்த்துவார்கள். தஞ்சைக்கு ஆளுநர் வர இருக்கிறார். அவர் வந்துவிட்டு சென்ற பின்னர் சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் தெரிவித்து அடுத்த மாதம் 2-ஆம் தேதிக்கு பிறகு வேகத்தடை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
இதனையேற்று மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்த மறியலால் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.