சென்னையில் குறைந்தது கொரோனா பரவும் திறன்... ஐஐடி ஆய்வில் சூப்பர் தகவல்!!

By Narendran SFirst Published Jan 19, 2022, 6:20 PM IST
Highlights

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடும் ஆர்-வேல்யு மதிப்பு 2.4 ஆக குறைந்துள்ளதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடும் ஆர்-வேல்யு கடந்த இரண்டு வாரங்களை விட திடீரென ஜனவரி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான வாரத்தில் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆர் எண் மதிப்பு 2.4 ஆக குறைந்துள்ளதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்-எண் மதிப்பு என்பது கொரோனா வைரசை பரப்பும் திறனை குறிப்பது ஆகும். ஆர் என்பது பாதிக்கப்பட்ட நபர் ஒரு வைரசை சராசரியாக பரப்பும் நபர்களின் எண்ணிக்கையை குறிப்பது ஆகும். ஒருவரிடம் இருந்து 10 முதல் 15 பேரிடம் பரவினால் ஆர் மதிப்பு 10 அல்லது 15 என்பதாக இருக்கும். ஆனால் ஒருவர் மூலம் ஒருவருக்கே பரவியது என்றால் ஆர் மதிப்பு 1 ஆகும். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, நாட்டின் ஒட்டுமொத்த ஆர்-மதிப்பு மார்ச் 9 முதல் ஏப்ரல் 21 வரை 1.37 என்ற அளவுக்கு அதிகரித்தது. இந்த எண்ணிக்கை ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 1.18 ஆகவும், பின்னர் ஏப்ரல் 29 முதல் மே 7 வரை 1.10 ஆகவும் குறைந்து காணப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் ஆர்-மதிப்பு மே 15 முதல் ஜூன் 26 வரை 0.78 ஆகவும், ஜூன் 20 முதல் ஜூலை 7 வரை 0.88 ஆகவும் இருந்தது. ஆர்-வேல்யு எண்ணில் 1க்கு குறைவாக இருந்தால் தான் நோய் பரவல் குறைவாக இருக்கிறது. ஆனால் 1 அல்லது அதிகமாகச் செல்லும்போது, நோய்தொற்று பரவல் வேகம் அதிகரிக்கிறது என்பதாகும். அதன்படி ஜூலை முதல் வாரத்தில் குறைந்த ஆர்-வேல்யு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் அலட்சியம் காரணமாக மீண்டும் உயரத்தொடங்கியது. என்.டி.டி.வி பகுப்பாய்வின்படி, ஜூலை 16 ஆம் தேதியன்று 0.95 என்ற புதிய உயர்வைத் தொட்டது. இந்த மதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் 1.17 ஆக இருந்து பின் செப்டம்பர் மாதத்தில் குறைந்து 0.92 ஆக பதிவானது. அதைப்போன்று செப்டம்பர் 25ம் தேதி முதல் அக்டோபர் 18 வரை 0.90 ஆக மேலும் குறைந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் ஒமிக்ரான் மற்றும் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆர்-வேல்யூ மீண்டும் அதிகரித்துள்ளது.

நோய்த்தொற்றின் பரவலைக் குறிக்கும் ஆர் வேல்யூ மதிப்பு 2.69 உயர்ந்தது. இது தொற்று நோயின் இரண்டாவது அலையின் உச்சத்தின் போது பதிவு செய்யப்பட்ட 1.69யை விட அதிகமாகும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவின் ஆர்-வேல்யுவை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடி சார்பில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின்படி கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்த ஆர்-வேல்யு ஜனவரி 7 முதல் 13ம் தேதி வரையிலான வாரத்தில் குறைந்துள்ளது. மும்பையில் 1.3, டெல்லியில் 2.5, சென்னையில் 2.4, கொல்கத்தாவில் 1.6 என்ற அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் 31ம் தேதி 2.9 என்ற அளவிலும், 2022ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 6 வரை ஆர்-வேல்யு 4 என்ற அளவிலும் இருந்தது. ஆனால் கடந்த இருவாரங்களில் இல்லாத அளவு ஆர்-வேல்யு பல்வேறு நகரங்களில் குறைந்துள்ளது. இதன் மூலம் தொற்றின் வேகம் குறையத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!