தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. இந்தநிலையில் மத்திய அரசு கூட்டத்தில் ஆளுநர் தொடர்பாக புகார் தெரிவித்து சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு செய்தார்.
ஆளுநர்- தமிழக அரசு மோதல்
ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு சட்டப்பேரவையில் ஒப்புதல் கொடுத்த மசோதாக்களை அனுமதி கொடுக்காமல் பல மாத காலம் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு காலம் தாழ்த்தி வருவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசுக்கு எதிராக தமிழக அரசு நிகழ்வில் விமர்சித்து பேசுவது. கல்லூரி மாணவர்கள் பட்டமளிப்பு விழாக்களில் ஆர்எஸ்எஸ் கருத்துகளை பேசுவது என தமிழக அரசு புகார் கூறி வருகிறது. மேலும் ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கருத்துகள் நீதிபதியும் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர்கள் கூட்டத்தில் அப்பாவு
மேலும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் கூடுதலாக சேர்த்தும் வார்த்தைகளை நீக்கியும் பேசினார். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையானது உரிய முறையில் வாசிக்காமல் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற 85- வது அகில இந்திய சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டு அரசமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழாவில் உரையாற்றினார். அப்போது சட்டமன்ற மரபுகள், மசோதாக்கள் தாக்கல், திட்டங்களுக்கு ஒப்புதல் குறித்து பேசினார். மேலும் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாகவும் விமர்சித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஆளுநர் குறித்து பேசியபோது இடையிடையே குறுக்கிட்ட மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஆளுநர் குறித்து பேசக்கூடாது எனவும், ஆளுநர் குறித்து சட்டப் பேரவைத் தலைவர் பேசியது நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது எனவும் தெரிவித்தார். "தமிழ்நாடு ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
வெளிநடப்பு செய்த அப்பாவு
இதுகுறித்து என்னால் இந்த அமைப்பில் பேச முடியாவில்லை என்றால், வேறு எங்கு பேசுவது" என்று சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பினார்கள். இருந்த போதும் ஆளுநர் குறித்து மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் பேசியது நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது என மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்தார்.