பத்துவரி பதிவைக் கூட சொந்தமாக எழுத தைரியல! சந்தி சிரிக்கிறது! இபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்தது யார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jan 20, 2025, 8:37 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரே அறிக்கையை வெளியிட்டதன் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையேயான கள்ளக் கூட்டணி அம்பலமாகியுள்ளது.


பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையை, அப்படியே அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளது தற்போது, அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி மீண்டும் அம்பலமாகியுள்ளது என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டள்ள எக்ஸ் தளத்தில்: அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை நொடிக்கொரு முறை இந்த நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். புதுக்கோட்டை திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணம் தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அப்பட்டமாக ஒரே வரிகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுச் சந்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள். அண்ணாமலை நேற்று போட்ட பதிவை அப்படியே வழிமொழிந்து, ’பசையே’ இல்லாமல், காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

Latest Videos

பத்துவரி பதிவைக் கூட சொந்தமாக எழுதத் தைரியமில்லாமல், மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு வந்த பழனிசாமி, டெல்லியிலிருந்து பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு எழுதிக்கொடுத்த பதிவை அப்படியே நகல் எடுத்து வெளியிடும் அளவிற்கு பாஜகவின் அடிமட்ட அடிமையாகவே மாறிவிட்டார் பழனிசாமி. இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான அறிக்கை விடும் வழக்கத்தை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுக செய்ததை சமூக வலைத்தளம் முழுவதும் கேலிப் பொருளாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

பழனிசாமியின் நெருங்கிய ஈரோட்டு உறவினர் இடங்களில் மோடி அரசின் வருமான வரித்துறை சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்ற பிறகு, பழனிசாமிக்கு ’பய’ காய்ச்சல் வந்துவிட்டதா? டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் முகவரியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையிலேயே அதிமுகவின் அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் பழனிசாமி வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ, இரட்டை இலை என பழனிசாமி தினமும் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்குப் பதில் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையை டெல்லிக்கோ அல்லது சென்னை தியாகராயர் நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள கமலாலயம் அலுவலகத்திலோ மாற்றிக் கொள்ளலாம்.

அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி பிரதமர் மோடி நடத்தும் அப்பட்டமான பொம்மலாட்ட நாடகம். அச்சுபிசகாமல் ஆடும் பொம்மை பழனிசாமி. “ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்பப் புதுமையாக இருக்குது. நாலுபேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே’’ என்ற திரைப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது  என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

click me!