
தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அது குறித்து எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையானது. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் எதிராக அமைந்த எந்த ட்வீட் தொடர்பாகத்தான் ஆதவ் அர்ஜுனா மீது இப்போது வழக்கு போடப்பட்டுள்ளது.
அதாவது, ''சாலையில் நடந்து சென்றாலே தடியடி.. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.… இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்'' என்று ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார்.
பின்பு கடுமையாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா தனது பதிவை ஆதவ் அர்ஜுனா டெலிட் செய்தார். இந்த கருத்து இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் எதிராக அமைந்துள்ளதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கூறியிருந்தார். இவரை விஜய் கட்சியை விட்டு ஏன் நீக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனா கைதாக வாய்ப்பு
இதற்கிடையே ஆதவ் அர்ஜுனாவின் ட்வீட் தொடர்பாக காவல்துறைக்கு நிறைய புகார்கள் சென்றன. அதன்பேரில் தான் ஆதவ் அர்ஜுனா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும். அவர் இப்படிப்பட்ட பதிவை போட்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் ஆதவ் அர்ஜுனா கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.