
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த என்.டி.ஏ. எம்.பி.க்கள் குழுவை பாஜக அமைத்தது. ஹேமமாலினி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் அடங்கிய இந்த உண்மை கண்டறியும் குழுவினர் கரூர் வந்து நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக உண்மை கண்டறியும் குழு, ''கரூர் கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை. இதில் ஏதோ மர்மம் உள்ளது. பெரிய நடிகரான விஜய் பிரச்சாரம் செய்ய குறுகிய இடத்தில் அனுமதி கொடுத்தது நியாயமில்லை. உளவுத்துறை எங்கே சென்றது? திமுக அரசு தங்களது அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறது. இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி தலைமையில் நியாயமான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி விஜய்யை காப்பாற்ற அதிமுகவும், பாஜகவும் முயற்சிக்கின்றன என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கரூர் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறது. இதை வைத்து பாஜக தங்கள் அரசியல் சித்து விளையாட்டை விளையாடுகிறது.
காங்கிரஸின் உதவி தேவை
இவ்வளவு ஆர்வமாக பாஜக உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சூழலில் இவர்களின் சதியை முறியடிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தேவை உள்ளது. ஆகவே காங்கிரஸ் கட்சி சார்பில் உண்மை கண்டறியும் குழுவை உடனடியாக கரூருக்கு அனுப்ப வேண்டும் என ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.