
கொடிமரத்தால் விபத்து
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தங்களது கட்சி தலைவர்களை வரவேற்பதற்காக நடுரோட்டில் வைக்கப்படும் பேனர் மற்றும் கொடிமரத்தால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் கொடிமரங்கள், பேனர்கள் நடுவதை தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுவார்கள். ஆனால் நாளடைவில் இந்த உத்தரவு காற்றில் பறந்து விடும். அந்த வகையில் சாலையில் அதிமுக கொடியை நட்டுக்கொண்டிருந்த தொழிலாளர் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயை உயிர் இழந்துள்ளார்.
இபிஎஸ்யை வரவேற்று கொடிகம்பம்
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அதிமுக நிர்வாகி ஜெகதீசன் என்பவரது இல்ல திருமண விழா இன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். இதனையடுத்து அவரை வரவேற்பதற்காக விளம்பர பதாகைகள் மற்றும் கொடி கம்பங்களை கட்சி நிர்வாகிகள் வைத்துள்ளனர். அந்த வகையில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் அதிமுக கொடிக்கம்பங்களை நடும் பணியினை சேலம் நெய்க்காரப்பட்டி சேர்ந்த 6 பேர் கொடிக்கம்பங்களை வாகனத்தில் வைத்து சாலைக்கு நடுவில் உள்ள இடத்தில் நடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
தொழிலாளி மீது மோதிய லாரி
அப்போது கூலி தொழிலாளி சந்திரசேகர் (52). இரும்பு கம்பிகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தலைவாசலில் இருந்து காட்டுகோட்டை நோக்கி சென்ற லாரி சந்திரசேகர் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே சந்திரசேகர் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.