
கடலூர்
கடலூரில், ஒரு டன் ரேசன் அரிசி கடத்திய பெண்ணை கள்ளச்சந்தைக்காரர் தடுப்புச் சட்டத்தில் காவலாளர்கள் கைது செய்தனர். ரேசன் பொருட்களை கடத்துவது, பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது சம்பந்தமாக தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று ஆய்வாளர் சரவணன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் அடிக்கடி ரேசன் அரிசி கடத்தல் நடைபெறுவறுவதாக குடிமை பொருள் வழங்கல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் சந்துரு மற்றும் காவலாளர்கள் கடந்த 11-ஆம் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கடலூர் - புதுச்சேரி சாலையில் உள்ள பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது அங்கு விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி காஞ்சனா (46) என்பவர் சுமார் ஒரு டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே, காஞ்சனாவிடம் இருந்து ஒரு டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். பின்னர் அவரை கடலூர் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார்.
கடத்தல் தொழிலில் காஞ்சனா அடிக்கடி ஈடுபட்டு வந்ததால், அவரை கள்ளச் சந்தைக்காரர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்படி காஞ்சனாவை தடுப்பு காவல் சட்டத்தில் காவலாளர்கள் கைது செய்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் சரவணன் கூறியது:
“ரேசன் அரிசியை வெளிச்சந்தையில் விலைக்கு வாங்குவதும், விற்பதும், பதுக்கி வைப்பதும் சட்டத்துக்கு புறம்பானது என்பதால் ரேசன் பொருட்களை கடத்துவது, பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது சம்பந்தமாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு துணை காவல் கண்கானிப்பாளரை 94981 02508 என்ற கைபேசி எண்ணிலோ அல்லது ஆய்வாளரை 94452 85420 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்,
அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும்” என்று ஆய்வாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.