
நாமக்கல்
நாமக்கல் பேருந்து நிலையத்தில் மூன்று மாத கைக்குழந்தையை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்ற பெண் திரும்பி வராததால் அந்த மூதாட்டி கைக்குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமபட்டி அருகே சம்புமடையைச் சேர்ந்தவர் பார்வதி (67). தனது ஊருக்குச் செல்வதற்காக நேற்று பகல் 1 மணியளவில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் நிற்கும் இடத்தில் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பிறந்து நான்கு மாதங்களான ஆண் குழந்தையுடன் வந்த சுமார் 25 வயதுமிக்க இளம்பெண் ஒருவர் பார்வதியிடம் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும், குழந்தையை சிறிது நேரம் வைத்திருங்கள் என்று கூறியுள்ளார்.
எனவே, குழந்தையை பார்வதி வாங்கி வைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் திரும்பவரவில்லையாம். இதனையடுத்து, பார்வதி நாமக்கல் காவல் நிலையத்தில் அந்தக் குழந்தையை ஒப்படைத்தார்.
காவலாளர்கள் மூதாட்டியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், மாலை 5 மணி அளவில், காவல் நிலையம் வந்த அந்த இளம்பெண் அந்தக் குழந்தை தன்னுடையது என்றும், கழிப்பறை சென்ற தனக்கு அங்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், மயக்கம் தெளிந்து திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து காவலாளர்கள் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் சேலம் மாவட்டம், மல்லூரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி தீபா (21) என்பது தெரியவந்தது. இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு ஊருக்குத் திரும்பும்போது பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல மூதாட்டியிடம் குழந்தையைக் கொடுத்ததாக தீபா தெரிவித்தார்.
இதனையடுத்து காவலாளர்கள் தீபா கணவர் விஜயகுமார், நாமக்கல்லில் உள்ள உறவினர் ஆகியோரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்திய பிறகு தீபாவிடம் குழந்தையைக் கொடுத்து அனுப்பினர்.