இன்று 13-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் - நாகப்பட்டினத்தில் சுனாமி நினைவுப் பூங்காவில் அனுசரிக்கப்படுகிறது..

First Published Dec 26, 2017, 9:21 AM IST
Highlights
Tsunami Memorial Day 13th - Today is observed in Tsunami Memorial Park in Nagapattinam ...


நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் 13-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளான இன்று சுனாமி நினைவுப் பூங்காவில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி அனுசரிக்கப்படுகிறது.

2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமியாக உருவெடுத்தது.

இந்த சுனாமி பேரலை பெரும் சோகங்களும், கணக்கிட முடியாத இழப்பையும் ஏற்படுத்தியது. சுனாமி சீற்றத்தால் இந்தியாவில் அதிக பாதிப்புக்குள்ளானது தமிழகம். இதில், மிக அதிக பாதிப்புக்குள்ளானது நாகப்பட்டினம் மாவட்டம்.

இந்த மாவட்டத்தில் ஐந்து வட்டங்களுக்கு உள்பட்ட 38 வருவாய்க் கிராமங்கள் பலத்த இழப்புக்கு உள்ளாகின. இந்த மாவட்டத்தில் 6000-க்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகளை ஏற்படுத்திய சுனாமி பேரலை ரூ.733 கோடி மதிப்பிலான உடமைகளையும் சேதப்படுத்தி ஆட்டம் காணவைத்தது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமி சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை (அரசு கணக்குப்படி) 6065 பேர். இதில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 4231 பேர். பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 536 பேர்.

சுனாமி சீற்றத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சுனாமி நினைவுப் பூங்காவும், கீச்சாங்குப்பத்தில் சுனாமி நினைவு மண்டபமும், வேளாங்கண்ணியில் நினைவு தூணும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நினைவிடங்களில், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகள், மீனவக் கிராமங்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் சுனாமி 13-ஆம் நினைவு நாளான இன்று காலை நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவுப் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காலை தொடங்குகிறது.

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி அருகே சுனாமி நினைவுப் பேரணியைத் தொடங்கி வைத்து கலந்து கொள்கிறார்.

இதனைத் தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் மீனவக் கிராமங்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில், மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும், அமைதி ஊர்வலங்களும் இங்கு நடைபெறுகின்றன.

click me!