
மதுரை
மதுரையில் பாசனத்திர்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை - தேனி சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள திருமங்கலம் பிரதான கால்வாய் பாசனத்தை நம்பி 19 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து ஒவ்வொரு வருடமும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
அதேபோல இந்த வருடம் திருமங்கலம் முக்கிய கால்வாய்க்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்து, அதன்படி கடந்த 16-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பின்பு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் தண்ணீர் தொடந்து வரும் என்று நம்பிய விவசாயிகள், விவசாயப் பணிகள் பாதிப்பால் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர்கள் பலமுறை கோரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திருமங்கலம் பிரதான கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் நேற்று உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டியில் தேனி - மதுரை சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் பாசனத்திற்காக வைகையில் இருந்து உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், உதவிப் பொறியாளர்கள் பூமிநாதன், ராதாகிருஷ்ணன், கோவிந்தராஜ் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைத நடத்தினர்.
அதில், முன்னாள் மாவட்ட கௌன்சிலர் பண்பாளன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது மதுரை பொதுப்பணித்துறை பொறியாளரை சந்தித்து, திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் மதுரை - தேனி சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.