
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் பயிர் மற்றும் காய்கறிகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவற்றை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காட்டுப் பகுதிக்கு வருகைத் தந்துள்ளன.
இந்த யானைகள், பல குழுக்களாகப் பிரிந்து விவசாயப் பயிர்களைத் சாப்பிட்டும், கால்களால் மிதித்து சேதப்படுத்தியும் வருகின்றன.
இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே காப்புக்காட்டில் முகாமிட்டு இருந்த 30 யானைகள் நேற்று அங்கிருந்து உணவிற்காக வெளியேறி, அருகில் உள்ள குந்துக்கோட்டை கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் அழையா விருந்தளியாக புகுந்தன. அங்கிருந்த ராகி பயிர்களை சாப்பிட்டும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
இதனிடையே, தேன்கனிக்கோட்டை காட்டுப் பகுதியில் இருந்த யானைக் கூட்டத்திலிருந்து ஆறு ஆண் யானைகள் பிரிந்து கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி ஒசூர் அருகேயுள்ள சானமாவு காட்டுக்கு வந்தன.
பிறகு, அங்கிருந்து இராயக்கோட்டை சாலை வழியாக போடூர்பள்ளம் காட்டுக்குச் சென்றன. தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து மேலும் நான்கு யானைகள் நேற்று ஒசூர் சானமாவு காட்டுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் போடூர்பள்ளம் காட்டில் முகாமிட்டிருந்த ஆறு யானைகளில், மூன்று யானைகள் தனியாகப் பிரிந்து பாத்தகோட்டா கிராமத்தில் வெள்ளரிக்காய் தோட்டத்தில் புகுந்து தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
இதனையடுத்து மீண்டும் போடூர்பள்ளம் காட்டுக்குச் சென்றன. தற்போது, ஒசூர், போடூர்பள்ளம் காட்டில் ஆறு யானைகளும், சானமாவு காட்டில் நான்கு யானைகளும் உள்ளன.
சேதமடைந்த பயிர்கள், காய்கறிகளைக் கண்ட விவசாயிகள் கூறியது:
"யானைகள் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் இந்தப் பகுதிக்கு வருவது தொடர்கதை தான். யானைகள் பயிர்களை சாப்பிடுவது கூட கொஞ்சமாக தான் இருக்கும்.
ஆனால், அதன் கால்களில் மிதிப்பட்டு சேதமடையும் பயிர்கள் அதிகமாக இருக்கும். எனவே, கிராமங்களுக்குள் யானைகள் வராதவாறு வனப்பகுதியைச் சுற்றிலும் அகழிகளை வெட்ட வேண்டும்.
இந்த யானைகளை மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.