
நாகப்பட்டினம்
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் இந்து கோயில்களை திறந்து பூஜைகள் நடத்தினால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் சுவாமிநாதன் நாகப்பட்டினத்தில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கலாச்சார, பண்பாட்டு சீரழிவு நடைபெறுகிறது.
நள்ளிரவில், நடு வீதியில் குடித்துவிட்டு கும்மாளமிடும் செயல்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக நள்ளிரவில் இந்து கோயில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்கள் அதிகம் திறக்கப்படுகின்றன.
அண்டை மாநிலமான ஆந்திரத்தில் அம்மாநில அரசு கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு வழிபாடுகள் தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து கோயில் நிர்வாக அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
இதேபோல, தமிழக அரசும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று டிசம்பர் - 31 நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கோயில்கள் நள்ளிரவில் திறக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கியமான பெரிய கோயில்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
இல்லையேல் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று தேவாரம் திருவாசகம் மற்றும் திருமுறை பாராயணம் செய்து, கைலாய வாத்தியங்கள் இசைத்தப்படி அறநிலையத் துறை அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.