தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி 5 வயது பூர்த்தியானால் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம் என தமிழக முதலமைச்சரிடம் மாநில கல்விக்கொள்கை குழு பரிந்துரையை வழங்கியுள்ளது.
11ஆம் வகுப்பு மதிப்பெண் தேவை
மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கை தயாரிக்க தமிழக அரசு சார்பாக குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் வழங்கினார்கள். இந்த குழுவின் பரிந்துரை அறிக்கையில், +1 பொதுத்தேர்வு தொடர வேண்டும் எனவும், கல்லூரிகளில் சேர 12ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது பிளஸ்-1 மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Annamalai : வெளிநாட்டில் படிக்க செல்லும் அண்ணாமலை.! தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்.? வெளியான தகவல்
5வயது பூர்த்தியானால் 1ஆம் வகுப்பு
5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும் என இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐந்து வயது பூர்த்தியானால் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம் என இந்த குழு பரிந்துரை வழங்கியுள்ளது. மேலும், 3, 5 ,8 வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தக்கூடாது என்றும், தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் எனவும், நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் விளம்பரம் தடை
தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்ற போதே படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்றக் கூடாது என தெரிவித்துள்ள மாநில கல்விக்கொள்கை குழு, உயர்கல்வியில் (open book assessment) தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம் என கூறியுள்ளது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஸ்போக்கன் இங்கிலீஷ்" தவிர "ஸ்போக்கன் தமிழ்" மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாநில கல்வி கொள்கை குழுவினர் வழங்கிய பரிந்துரைகளின் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிக்கையின் மீது தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.