
திருச்சிராப்பள்ளி மாநகரில் அண்மை காலமாக தனியார் பேருந்துகள் அதிகமான பயணிகளை ஏற்றும் நோக்கில் போட்டிப்போட்டுக் கொண்டு வேகமாக இயக்கப்படுவதாக பயணிகள் அவ்வபோது குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படும் ஓட்டுநர், நடத்துநர்கள் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து செயல்படுதால் பயணிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் (30.01.26) திருச்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு சங்கர் என பெயரிட்ட தனியார் பேருந்து சென்றுள்ளது. அந்த தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை மிகவும் வேகமாகவும் ஆபத்தான முறையிலும் இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதனை பேருந்து உள்ளிருந்த பயணி ஒருவர் "இவ்வளவு வேகமாக ஓட்டாதீர்கள் அல்லது என்னை இறக்கி விட்டு விடுங்கள்" ஓட்டுநர் மற்றும் நடத்தினர்டம் கேட்டுள்ளார்.
அதன் பின்பு வேண்டுமென்றே மிகவும் ஆபத்தான முறையில் மற்றும் வேகமாக பேருந்து இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நடத்துநரின் போக்கை பயணி தொடர்ந்து கண்டித்தவாறு இருந்துள்ளார். இதனைத் தாடர்ந்து திருச்சி பேருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வந்தவுடன் அந்த ஓட்டுநர் தன் பேருந்தில் பயணித்த அந்த பயணியை தகாத வார்த்தைகளில் திட்டி, கடுமையாகத் தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில் காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அன்புராஜை கைது செய்தனர்.