
ரெயில்வே துறையின் மிகப்பெரிய உணவு வளாகம்(புட் பிளாசா) சென்னை தாம்பரத்தில் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.
இந்த வளாகத்தில் சரவணபவன் ஓட்டல் முதல் மெக்டோனல்ட்ஸ் கடைகள் வரை, சைவம், அசைவம் உணவு, பாஸ்ட் புட்கள் இணைந்த ஏராளமான உணவு விற்பனைக் கடைகள் வர உள்ளன. இதனால், பயணிகள் வகை, வகையான, ருசியான, தரமான தங்களுக்கு பிடித்தமான உணவுகளை தேர்வுசெய்து சாப்பிடலாம்.
ரெயில் துறையின் கீழ் வரும் மிகப்பெரிய உணவு வளாகம் தாம்பரத்தில்தான் என்றால் மிகையில்லை. இந்த உணவு வளாகத்தை இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்த வைக்க மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சென்னை வர உள்ளார்.
இந்த 3 அடுக்கு வளாகத்தில் அமைக்கப்பட கடைகளில் இருந்து வாடகை மற்றும் வரியாக அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரூ.50 கோடி ஈட்ட ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்த வளாகத்தில் அடையார் ஆனந்த பவன், சரவண பவன், மெட்ராஸ் காபே ஹவுஸ், மெக்டோனல்ட்ஸ், மதுரை குமார் மெஸ் என பல உணவுகங்கள் வர உள்ளன. மேலும், ரெயில்வே சார்பில் ரெயில் நீர் விற்பனை செய்யும் கடைகளும் வரவுள்ளன.
இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தடுக்கும் வகையில் “ஸ்பிரிங்லர்” வகையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முதல் முறையாக, ரெயில்வே நிலையத்தில், சைவம் மற்றும் அசைவ உணவுப்பொருட்களை பாதுகாக்க 2 அடுக்கு குளிர்பதன வசதி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகம் தாம்பரம் ரெயில்வே நிலையத்தை சுற்றி 3 இடங்களில் 3 இடங்களில் அமைய உள்ளது. ரெயில் நிலையத்தின் மேற்குப்பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையில், பஸ்நிலையத்துக்கு பின்புறம் 3 அடுக்கு வணிக வளாகம் அமைய உள்ளது. இந்த வளாகத்தில் தென் இந்திய உணவுகள் அதிகம் கிடைக்கும் வகையிலும், குடும்பத்துடன் அமர்ந்துசாப்பிடும் வகையிலும் இட வசதியும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 அடுக்கு வணிக வளாகம், கிழக்குப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வருகிறது.ரெயில்வே நிலையத்துக்குள் கடைகள் வருகின்றன. இந்த வளாகங்கள் திறக்கப்பட்ட பின் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பயணிகள் வருகை தருவார்கள், தாம்பரம் ரெயில் நிலையம் சந்திப்பு நிலையமாக மாற்றப்பட்டால், ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் வருகைதருவார்கள் என ரெயில்வே தரப்பில் கூறப்படுகிறது.