
சென்னை சைதாப்பேட்டை சுடையம்மன்பேட்டை தெருவில் வசித்து வருபவர் ஆனந்தன். ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று எப்போதும் போல கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பிய ஆனந்தன், நேற்றிரவு கதவுகளை மூடிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
கல்லூரிக்குச் செல்வதற்காக அதிகாலை எழுந்த ஆனந்தனுக்கு பேரதிர்ச்சி. வீட்டின் முன்பக்கக் கதவு திறந்த நிலையில் இருந்தது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் பிற அறைகளுக்குச் சென்று சோதித்தார். அப்போது பீரோ கதவுகள் திறக்கப்பட்டு, லாக்கர்கள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 12 சவரன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு நேரில் சென்ற ஆனந்தன் கொள்ளைச் சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் சுடையம்மன்பேட்டைத் தெருவில் நடைபெற்ற இத்துணிகர கொள்ளைச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.