
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் அரசு பேருந்தின் பின்பக்கம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கார்வேபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜீவித் (19), தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் சிரஞ்சீவி (18) என்பவரை அழைத்துக் கொண்டு வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அவர்கள் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்சோமார் பேட்டை அருகே சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் திடீரென்று பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத ஜீவித், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்புறமாக மோதியுள்ளார்.
இந்த விபத்தில் ஜீவித்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனிருந்த சிரஞ்சீவி பலத்த காயத்தோடு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளார் அன்புமணி விபத்து நடந்த இடத்திற்கு சென்று பலியான ஜீவித்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.