
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் தலையில் ஒருவர் செருப்பை வைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் ரோகிணி கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். ஆட்சியர் ரோகினியுடன் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமாரும் உடன் இருந்தார்.
அப்போது 55 வயதுடைய ஒருவர் கோரிக்கை மனுவுடன் அங்கு வந்ததார். அப்போது தான் கொண்டு வந்த மனுவை ஆட்சியரிடம் கொடுத்தார். அதை வாங்கி ஆட்சியர் ரோகிணி படித்துக் கொண்டிருந்தார். மனு கொடுத்தவர் திடீரென தன் காலில் மாட்டியிருந்த செருப்பை கழற்றி ஆட்சியர் ரோகினியின் தலையில் வைக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் அங்கிருந்து கத்தியபடியே ஓடினார். இதை அடுத்து அந்த நபர் வருவாய் அதிகாரி சுகுமார் தலையில் செருப்பை வைத்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதன் பின்னர், அவரை போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தனது பெயர் ஆறுமுகம் என்றும் தான் ஒரு டாக்டர் என்றும் கூறினார். அவர் கூறியது உண்மையா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.